2025 வரைக்கும் கொஞ்சமா சாப்பிடுங்கள் என்ற தனது சொந்த நாட்டு மக்களுக்கு உத்தரவு போட்டுள்ளார் ஒரு நாட்டின் அதிபர். அட வேற எங்கும் இல்லைங்க. சர்ச்சைகளுக்குப் பெயர் போன வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் தான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


வட கொரியாவைப் பற்றி வரும் செய்திகளில் பெரும்பாலானவை அந்நாட்டில் நடைபெறும் அணு ஆயுத ஏவுகணை சோதனை தொடர்பானதாகவே இருக்கும். இதனாலேயே வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.


ஏற்கெனவே இப்படி கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வட கொரியா தற்போது கடுமையான உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. வடகொரியா உணவுப் பொருட்களின் தேவை பெரும்பாலும் இறக்குமதியாலேயே நிறைவேறி வந்தது. இந்நிலையில் தான் கடந்த டிசம்பர் 2019ல் உலகை ஆட்கொண்டது கொரோனா. அதன் பின்னர் தனது நாட்டின் எல்லைகளை வட கொரியா மூடியது. குறிப்பாக சீனாவுடனான எல்லையை 2020 ஜனவரியில் முற்றிலுமாக மூடியது. கொரோனா அச்சுறுத்தலில் இருந்து தற்காத்துக் கொள்ள வரும் 2025 வரை சீனாவுடனான எல்லையைத் திறக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.


இந்நிலையில், 2025 வரைக்கும் கொஞ்சமா சாப்பிடுங்கள் என்ற தனது சொந்த நாட்டு மக்களுக்கு உத்தரவு போட்டுள்ளார் வடகொரியா நாட்டு அதிபர் கிம்ஜோங் உன். ஏற்கெனவே அந்நாட்டில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு டஜன் வாழைப்பழத்தை வாங்க வேண்டும் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3000 கொடுக்க வேண்டும். அதுவும் பணம் இருந்தால் கூட நினைத்ததை எல்லாம் வாங்கிவிட முடியாது. ஒரு நபருக்கு இவ்வளவு தான் உணவுப் பொருள் என்று அளந்து அளந்து தான் விற்பனையும் நடக்கிறது. இறக்குமதிகளை முற்றிலுமாக முடக்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் உணவு கிடைக்கல் அல்லல்படுகின்றனர்.




மக்காச்சோளம், காய்கறி, பழங்கள் உள்ளிட்டை முடிந்தவற்றை தாங்களே விளைவிக்குமாறு அரசாங்கம் ஊக்குவிக்கிறது. வடகொரியாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. கடுமையான பனிப்பொலிவுடன் கூடிய குளிர்காலம் அங்கு நிலவும். குளிர் காலத்தில் எப்போதுமே வடகொரியா அதிகளவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இறக்குமதியும் இல்லை. உள்நாட்டில் விளைச்சலுக்கும் வாய்ப்பில்லை என்ற சூழலில் அதிபர் 2025 வரை குறைவாக சாப்பிடுங்கள் என்று கூறியிருப்பது அந்நாட்டு மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 2025 வரை உயிர் பிழைப்போமே என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். 


வட கொரியாவுக்கு உணவுப் பஞ்சம் புதிதல்ல எனக் கூறுகிறது வரலாறு. 1990களில் கடும் உணவுப் பஞ்சத்தை வட கொரியா சந்தித்தது. அப்போது லட்சக் கணக்கானோர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் அதேபோன்றதொரு சூழலை நோக்கி வட கொரியா செல்கிறது/