உலகின் மிகப்பெரிய கப்பல் கண்டெய்னர் நிறுவனம், இலங்கையின் தெற்கே தங்களின் கடல் வழி பாதையை மாற்றியுள்ளது. அரிய வகை நீல திமிங்கலங்கள் மற்றும் பிற உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனம், விஞ்ஞானிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில் உள்ளூர் போக்குவரத்துப் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதையிலிருந்து 15 கடல் மைல் தெற்கே தனது பாதையை நகர்த்தியுள்ளது. இது, நீல திமிங்கலங்களுக்கும் கப்பல்களுக்கும் இடையே 95 சதவீதம் மோதல்களை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீல திமிங்கலங்கள் உலகில் 5,000 முதல் 10,000 வரை எஞ்சியிருக்கும் ஒரு அழிந்து வரும் இனமாகும். அவை 30 மீட்டருக்கும் அதிகமான நீளம், 150 டன் எடை மற்றும் 90 வயது வரை வளரும். அதன் வாழ்விடம் இலங்கைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலின் வடக்கே அமைந்துள்ளது. அங்கு, அவை ஆண்டு முழுவதும் இருக்கும். இதன் காரணமாக, இங்கு சுற்றுலாவாசிகள் பெரிய அளவில் ஈர்க்கப்படுகின்றனர்.
1960களில் திமிங்கல வேட்டையாடப்படுவது தடை செய்யப்பட்டதிலிருந்து இந்த நீல திமிங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கப்பல் போக்குவரத்து மாறியுள்ளது.
இலங்கையின் விலங்கு உரிமை ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான கெஹான் விஜேரத்ன இதுகுறித்து கூறுகையில், கடல் தளத்தின் நிலப்பரப்பு, நீரோட்டங்கள் மற்றும் பருவமழை ஆகியவை தென் இலங்கைக்கு அப்பால் உள்ள கடலை ஊட்டச்சத்துக்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களால் நிறைந்ததாக ஆக்குகிறது என்றார்.
"இந்த வளமான உணவு வலை மீன்பிடிக்க உகந்த ஒரு பகுதியை உருவாக்கி உள்ளது. இந்த பகுதியில் திமிங்கலங்களும் கூடுவதில் ஆச்சரியமில்லை" என்றும் அவர் கூறியுள்ளார். திமிங்கலம் மற்றும் டால்பின் பாதுகாப்புக் குழுவானது ஒவ்வொரு ஆண்டும் மொத்த வருவாயில் 2.1 பில்லியனை டாலர்களை கொண்டுவருவதாக மதிப்பிடுகிறது. 13 மில்லியன் மக்கள், உலகளவில் 120 நாடுகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதேசங்களில் திமிங்கலத்தைப் பார்க்கும் பயணங்களை மேற்கொள்கின்றனர். "வணிக கப்பல் துறையானது திமிங்கலங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக திமிங்கலங்களுடன் கப்பல் மோதலின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது" என மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனத்தின் நிலைத்தன்மைக்கான துணைத் தலைவர் ஸ்டெபானியா லல்லாய் கூறியுள்ளார்.
"இந்த பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொழில்துறை, அறிவியல் அமைப்புகள், சிவில் சமூகம் மற்றும் அரசாங்கங்களுக்கிடையில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் அவசியம்" என்றும் அவர் கூறியுள்ளார். உலகின் மிக பெரிய கப்பல் நிறுவனம் அதன் கடல் வழியை மாற்றியமைத்திருப்பது உலகின் மற்ற கப்பல் நிறுவனங்கள் மாற்றியமைக்க முதல் படியாக அமைந்துள்ளது.