மூன்று நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஞாயிற்றுக்கிழமை அன்று சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத்தை ஜெட்டாவில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார்.






இளவரசரும், துணைப் பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸிடம், பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் ஒப்படைக்கப்பட்டதாக சவுதியின் செய்தி நிறுவனமான சவுதி பிரஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.


பயணம் குறித்து ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று மாலை ஜெட்டாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திப்பதில் பெருமை அடைகிறேன். பிரதமர் மோடியின் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தேன். நமது இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவருக்கு எடுத்துரைத்தேன். எங்கள் உறவுகள் குறித்த அவரது பார்வையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.






இந்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், சமீபத்திய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள், அவற்றுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், ஜெய்சங்கர், சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். தற்போதைய உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். ஜி-20 மற்றும் பலதரப்பு அமைப்புகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்ற இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.


அரசியல், பாதுகாப்பு, சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான குழுவின் (PSSC) முதல் அமைச்சரவை கூட்டத்திற்கு ஜெய்சங்கரும் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சரும் தலைமை தாங்கினார். "இன்று பிற்பகல் சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல்பின் ஃபர்ஹானுடன் பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. இந்தியா-சவுதி கூட்டாண்மை கவுன்சிலின் அரசியல், பாதுகாப்பு, சமூக மற்றும் கலாசாரக் குழுவிற்கு அவருடன் இணைந்து தலைமை தாங்கினேன். எங்கள் ஒத்துழைப்பு பகிரப்பட்ட வளர்ச்சி, செழிப்பு, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சிக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது" என ஜெய்சங்கர் ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் ட்வீட் செய்துள்ளார்.


இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 18 சதவீதத்திற்கும் அதிகமானவை சவுதி அரேபியாவிடமிருந்து வருகின்றன. 2022ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் (ஏப்ரல் - டிசம்பர்), இருதரப்பு வர்த்தகம் 29.28 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்தது. இந்த காலகட்டத்தில், சவூதி அரேபியாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள் 22.65 பில்லியன் டாலர்களாகவும், சவுதி அரேபியாவுக்கான ஏற்றுமதிகள் 6.63 பில்லியன் டாலர்களாகவும் இருந்தன.