Donald Trump: அமெரிக்க நீதிமன்றத்தின் புதிய உத்தரவு அதிபர் ட்ரம்பிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அமெரிக்க நீதிமன்றம் அதிரடி:
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றது முதலே உலக நாடுகள் மட்டுமின்றி, உள்நாட்டு அரசு அதிகாரிகளே கலக்கமடையும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் தான், அரசாங்கத்தில் உள்ள ஊழியர்களின் அளவைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஏராளமானோர் அதிரடியாக ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தகுதிகாண் தொழிலாளர்களை (probationary workers) மீண்டும் பணியமர்த்துமாறு ஆறு கூட்டாட்சி நிறுவனங்களுக்கு அமெரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதி வில்லியம் அல்சுப் என்பவர் வெளியிட்டுள்ள தீர்ப்பில், “ பெருமளவிலான பணிநீக்கங்களுக்கு "மோசமான செயல்திறன்" என்று நியாயப்படுத்துவது "சட்டப்பூர்வ தேவைகளைத் தவிர்க்க முயற்சிக்கும் ஒரு போலியான காரணம்" என குறிப்பிட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கு விவரம்:
ஊழியர் சங்கங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த அல்சுப், முறையற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனவரையும் மீண்டும் பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். அதில் அரசின் கருவூலம், படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் உள்துறை ஆக்ய துறைகள் அடங்கும். தீர்ப்பில், "நமது அரசாங்கம் சில நல்ல ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அவர்கள் நல்லதை நன்கு அறிந்திருந்தாலும், செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது என்று கூறும் ஒரு சோகமான நாள் இது, அது ஒரு பொய்" என்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில் நீதிபதி அல்சப் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பிற்கு பின்னடைவு:
ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, டிரம்ப் அமெரிக்க அரசாங்கத்தின் செலவினத் திட்டங்களைக் குறைக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான கூட்டாட்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அவரது நடவடிக்கைகள் நீதிமன்றங்களிலிருந்து எதிர்ப்புகளைச் சந்தித்தன, பல நீதிபதிகள் அவற்றைத் தடுக்கும் நோக்கில் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அந்த வகையில் இந்த புதிய உத்தரவு அமைந்துள்ளது. இதன் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏராளமானோர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தை நாடிய ட்ரம்ப்:
அந்த வகையில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்கான ட்ரம்பின் புதிய உத்தரவையும் கீழமை நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தின. அதனை எதிர்த்து தற்போது அரசு நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அவசர மனுவை தாக்கல் செய்ய உள்ளது. அதன் மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பு பிறப்புரிமை குடியுரிமையை "அமெரிக்க மண்ணில் பிறந்த எவரும் ஒரு குடிமகன்" என்று உள்ளடக்கியது. ஆனால், சட்டவிரோத குடியேறிகள், தற்காலிக மாணவர்கள் மற்றும் வேலை விசா மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களின் குழந்தைகள் "அமெரிக்காவில் பிறந்தாலும்" அவர்களுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்பதே ட்ரம்பின் முயற்சியாகும்.