SCO Summit 2025: பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்:
இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதன் முடிவில் பொது அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளின் தலைவர்களின் பெயரில் வெளியான அறிக்கையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த திவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் தான் நடத்தியதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், அந்த நாட்டின் பிரதமர் பங்கேற்ற மாநாட்டிலேயே பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டனமும், இரங்கலும்
மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் சார்பில் வெளியான கூட்டு அறிக்கையில், “ பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதே நேரத்தில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உறுப்பு நாடுகளின் உறுதிப்பாட்டை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் கூட்டு அறிக்கை உறுதிப்படுத்தியது. தீவிரவாத குழுக்களை "அரசியல் அல்லது கூலிப்படை நோக்கங்களுக்காக" பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என கண்டித்துள்ளனர்.
ஒத்துழைப்பு அவசியம்
மேலும், "உறுப்பு நாடுகள் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் கடுமையாகக் கண்டிக்கின்றன, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை வலியுறுத்துகின்றன. பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய இயக்கம் உட்பட பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்தை அழைக்கிறோம்" என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு நோஸ் கட்
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், அதனை அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையே ராணுவ மோதலும் தொடங்கியது. அப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதலும் நடத்தியது. இதற்கு பதிலடி தர பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் சீனாவும் உதவியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிஃபும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகள் யாரும் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காதது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த தோல்வி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில், 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.