India China USA: ட்ரம்பின் வரி அழுத்தங்களை சமாளிக்கா, இந்தியா மற்றும் சீனா இணைந்து பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உருவெடுத்துள்ளது.

மோடி - ஜி ஜிங்பிங் பேச்சுவார்த்தை:

தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியுடன், சீன அதிபர் ஜி ஜிங்பிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பேசுகையில், பஞ்சசீலத்தை அதாவது அமைதியான சகவாழ்விற்கான ஐந்து கொள்கைகளை, இரு நாடுகளும் போற்றி ஊக்குவிக்க வேண்டும் வலியுறுத்தினார். இரு அண்டை நாடுகளும் கடந்த கால வேறுபாடுகளை கலையவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பஞ்சசீல் ஒப்பந்தம் என்றால் என்ன?

இதுகுறித்த அறிக்கையில், "70 ஆண்டுகளுக்கு முன்பு சீன மற்றும் இந்தியத் தலைவர்களின் பழைய தலைமுறையால் பரிந்துரைக்கப்பட்ட அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கொள்கைகள் போற்றப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். எல்லைப் பகுதிகளில் அமைதியை பராமரிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என சீன அதிபர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவும் சீனாவும் ஏப்ரல் 29, 1954 அன்று பஞ்சசீல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. முறையாக 'திபெத் பிராந்தியத்துடனான வர்த்தகம் மற்றும் தொடர்பு ஒப்பந்தம்' என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளும் தங்கள் உறவை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான ஐந்து கொள்கைகளை அறிமுகப்படுத்தியது.

பஞ்சசீல் கொள்கைகள் என்ன?

  • பரஸ்பரம் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மரியாதை செலுத்துதல்.
  • பரஸ்பர ஆக்கிரமிப்பு இல்லாமை
  • பரஸ்பர தலையீடு இல்லாமை
  • சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை
  • அமைதியான சகவாழ்வு

ஆகிய 5 கொள்கைகளை பஞ்சசீல் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. 

மீண்டும் வலுப்பெறுமா இந்தியா - சீனா உறவு?

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லையில் டோக்லாம் மோதலுக்குப் பிறகு, இருநாடுகளுக்கு இடையேயான உறவு சிக்கலை எதிர்கொண்டது. பின்னர் 2020 ஆம் ஆண்டில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பு துருப்புக்களும் தாக்கிக் கொண்டதால், இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து விவகாரங்களுக்கும் கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான், பிரதமர் மோடியின் அண்டை நாட்டிற்கான பயணத்தின் போது , ​​ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பல நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி அழுத்தங்களின் பின்னணியில் நடந்த பேச்சுவார்த்தையானது, இருநாடுகள் இடையே உள்ள வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்காக நடத்தப்பட்டன.

ட்ரம்பிற்கான சேதி என்ன?

தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில், ட்ரம்ப் வரியால் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை ஒற்றைப்புள்ளியை எட்டியுள்ளன. ஜி ஜிங்பிங்கை தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். வரி மூலம் உலக நாடுகளுக்கு வர்த்தகத்தில் அழுத்தம் கொடுக்க நினைக்கும் ட்ரம்பின் செயல்பாடு, ப்ரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது. அமெரிக்காவை பிரதான எற்றுமதிக்கான சந்தையாக சார்ந்து இருப்பதை தவிர்த்து, வர்த்தகத்தை மேம்படுத்த பல நாடுகளும் தயாராகி வருவதை இது உணர்த்துகிறது.