ஒமிக்ரான் வைரஸைத் தொடர்ந்து தற்போது NeoCov என்ற புதியவகை வைரஸ் பரவுவதாகவும், இதனால் பாதிக்கப்படும் 3 நோயாளிகளில் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


சீனாவின் ஊஹான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில்  ஆரம்பித்த கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை. முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை மற்றும் மாறுபட்ட கொரோனா என உருமாற்றம் அடைந்து மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிவருகிறது. பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பசி போன்ற பலவற்றில் மக்கள் பாதிப்பை சந்தித்து வந்த நிலையில்தான் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததாக தகவல் வெளியானது.



இதனால் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில்தான், ஒமிக்ரான் என வைரஸ் வேகமாக பரவியது. ஆனால் தொற்றின் பரவல் வேகமாக இருந்தாலும், அவை நுரையீரலை சென்றடைவதில் வேகம் காட்டவில்லை. இந்த சூழலில் தான் தற்போது புதிதாக நியோகோவ் என்ற புதிய வைரஸ் பரவுவதாகவும், இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என வுகான் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ் வேகமாகவும், அதிகமாகவும் தொற்றை உண்டாக்கும் என கூறப்படும் நிலையில், பாதிக்கப்படும் 3 பேரில் ஒருவர் நிச்சயம் உயிரிழந்துவிடுவார்கள் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


இதனால் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்று மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், இந்த நியோகோவ் வைரஸ் புதியது அல்ல என்றும், இது MERS – CoV வைரசுடன் தொடர்புடையது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த வகையான வைரஸ் கடந்த 2012 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளின்போது மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டது எனவும் மனிதர்களுக்கு கொரோனா வைரஸை ஏற்படுத்தும் SARS – Cov2 போன்றது எனவும் கூறப்படுகிறது. மேலும் மனிதர்களிடையே இந்த வைரஸ் தீவிரமாக பரவும் திறன் அல்ல என்றும், இருந்தப்போதும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்யப்பட வேண்டிய சூழலில் உள்ளோம் என்பதை நினைவில் வைத்து விழிப்புணர்வுடன் செயல்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


கொரோனா வைரஸ் போன்று பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டாலும், எதனால் இந்த புதிய நியோகோவ் வைரஸ் தொற்று ஏற்படுகிறது? காரணம் என்ன நாம் அறிந்துகொள்வோம்.



இந்த நியோகோவ் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு வௌவால் இனத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விலங்குகளிடையே பரவுவதாக அறியப்பட்டுள்ளது. BioRxiv என்னும் இணையதளத்தில் வெளியான புதிய ஆய்வு ஒன்று நியோகோவ் மற்றும் அதன் நெருங்கிய தன்மை கொண்ட PDF-2180-CoV மனிதர்களை பாதிக்கலாம் என்பதைக் கண்டறிந்துள்ளது.


இதோடு சீனாவில் வுகான் பல்கலைக்கழகம் மற்றும் சைனீஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இன்ஷ்டிட்யூட் ஆப் பயோபிசிக்ஸ் ஆராய்ச்சிகளின் கூற்றுப்படி, மனித உயிரணுக்களில் வைரஸ் ஊடுருவுதற்கு ஒரு பிறழ்வு மட்டுமே தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளனர். மேலும் சுவாசக்கோளாறுகள் அல்லது நோய்த்தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு உற்பத்தியாகும் ஆன்டிபாடிகள் அல்லது புரத மூலக்கூறுகள் நியோகோவ் வைரசுக்கு எதிராக பாதுகாக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது. எனவே மக்களை எளிதில் பாதிக்காது என அலட்சியமாக இல்லாமல் விழிப்புணர்வோடு இருந்து நியோகோவ் வைரசுக்கு எதிராகப் போராட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.