தனக்கு மன அமைதியை தரும் பெண்ணுடன் தான் வாழ்வேன் எனக் கூறி சவுதி அரேபியாவில் ஒருவர் இதுவரை 53 முறை திருமணம் செய்துள்ளார். சவுதியைச் சேர்ந்தவர் 63 வயதான அபு அப்துல்லா. இவர் 'இந்நூற்றாண்டில் பலதாரம் மணம் செய்தவர்' என்ற செல்லப்பெயருடனும் அழைக்கப்படுகிறார். பலதாரம் என்றால் 4, 5 திருமணம் என நினைத்துவிட வேண்டாம். இதுவரை அவர் 53 திருமணங்களை செய்துவிட்டார். இன்னமும் தனக்கான பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறாராம். எந்த பெண்ணிடம் ஒரு நிலைத்தன்மையும் மன அமைதியும் ஏற்படுகிறதோ அவருடனே வாழ்ந்து விடலாம் என்ற வைராக்கியத்துடன் இத்தனை கல்யாணத்தை கடந்து வந்துவிட்டார் இந்த பலதார மன்னர்.


அப்துல்லா தன்னுடைய முதல் திருமணத்தை 20 வயதில் செய்துள்ளார். அப்போதே 6 வயது மூத்த பெண்ணை மணம் புரிந்துள்ளார். அப்போது திருமணம் செய்த அப்துல்லாவுக்கு மனம் முழுவதும் எதிர்கால கனவுகள்தான் இருந்துள்ளன. இந்த பெண்ணுடன் வாழ்க்கையை வாழ வேண்டும். குழந்தைகளுக்கு அப்பாவாக வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டுள்ளார். அப்போது அவருக்கு வேறு திருமணம் என்ற எந்த ஒரு திட்டமும் இருக்கவில்லை. ஆனால் சில ஆண்டுகள் திருமண வாழ்க்கை சென்ற நிலையில் அப்துல்லாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. 




பிரச்னைகள் அடிக்கடி எழ 23வது வயதில் அடுத்த திருமணத்துக்கு அடிபோட்டுள்ளார் அப்துல்லா. தான் இன்னொரு திருமணம் செய்துகொள்ளபோவதாக முதல் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.  அவரும் ஒகே சொல்லவே இரண்டாவது திருமணமும் செய்துள்ளார். ஆனால் அடுத்த சில வருடங்களில் முதல் இரண்டு மனைவிகளிடம் வெறுமையை பார்த்த அப்துல்லா 3 வது பின்னர் 4 வது என திருமணத்தை தொடந்துள்ளார். அந்த நேரத்தில் முதல் இருவரையும் விவாகரத்து செய்துள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என நண்பர்கள் கேட்க, என்னை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளும் பெண்ணைத்தேடி செல்கிறேன் என சிம்பிளாக பதிலளித்துவிட்டு அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகியுள்ளார்.


20 வயதில் தொடங்கிய கல்யாண பயணம் தற்போது 53 கடந்து சென்றுவிட்டது. இது குறித்து பேசிய அப்துல்லா, '' என்னுடைய திருமண வரலாற்றில் மிகவும் குறைந்த காலம் என்பது ஒரு இரவு. ஒரே இரவில் ஒரு திருமணம் செய்துவிட்டு வேண்டாமென்று முடிவெடுத்துவிட்டேன்.உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணோடு திருமணம் செய்துகொண்டு அவளுடன் என்றென்றும் இருக்க விரும்புகிறான். ஆனால் உறவின் நிலைத்தன்மை என்பது இளம்பெண்களுடன் இல்லை. அது வயது முதிர்ந்த பெண்களிடம் இருக்கிறது என்றார்


தற்போது ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் அப்துல்லா. இதற்கு மேல் திருமணம் இல்லை என்றும் தீர்க்கமாக கூறியுள்ளார்