ஏஐ தொழில்நுட்பம்:


மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சாட் ஜிபிடியின் வெற்றி  தான் ஏஐ கருவிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்று கூட சொல்லாம். சாட் ஜிபிடி போன்ற ஏஐ கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், சாட் ஜிபிடி எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என்று கூட சொல்லப்படுகிறது.


செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்வது ஓபன்ஏஐ நிறுவனம். அந்த நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அறியப்பட்டவர்கள் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனும் தலைவர் கிரெக் ப்ரோக்மேனே ஆவர்.


ட்விஸ்ட் கொடுத்த சாம் ஆல்ட்மேன்:


ஓபன்ஏஐ நிறுவனத்தை இணைந்து உருவாக்கிய சாம் ஆல்ட்மேன், நிறுவனத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்கள் முன்பு திடீரென நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கிரெக் ப்ரோக்மேன் விலகினார். சாம் ஆல்ட்மேன் டிஸ்மிஸ் ஏஐ துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர், நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுந்த நிலையில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களுடன் சாம் ஆல்ட்மேன் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் இருக்கவில்லை என நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


சாம் ஆல்ட்மேன் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், ஓபன் நிறுவனத்தின் இடைக்கால சிஇஓவாக மீரா முராட்டி நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், சாம் ஆல்ட்மேனை ஓபன் ஏஐ நிறுவனத்தில்  கொண்டு வர இயக்குநர் குழு அவருடன் பேச்சுவார்த்தையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.  சாம் ஆல்ட்மேன் விவகாரம் தொடர்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் மீண்டும் சாம் ஆல்ட்மேன் சேர்வதாக ட்விட்டர்  (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ஓபன் ஏஐ நிறுவனமும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. 


"ஐ லவ் ஓபன் ஏஐ”






இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், "நான் ஓபன் ஏஐ நேசிக்கிறேன்.  கடந்த சில நாட்களாக நான் செய்த பணிகள் அணியை ஒன்றாக வைத்திருக்க உதவியது.  ஓபன் ஏஐ தான் எனக்கு சிறந்தது. நான் ஓபன் ஏஐயில் திரும்புவதற்கு காத்திருக்கிறேன். மைக்ரோசாஃப்ட் உடனான எங்கள் வலுவான கூட்டணியை உருவாகவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். 


இதற்கிடையில், ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து பணிநீக்ககம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளதாக பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது சாம் ஆல்ட்மேன் ஓபன் ஏஐ பக்கம் திரும்பிய நிலையில், மைக்ரோசாப்ட் ஏஐ பிரிவை யார் கவனிப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.