எலான் மஸ்க் தனது சமூக ஊடக தளமான எக்ஸ் அதன் விளம்பர வருவாயை, போரினால் பாதிக்கப்பட்ட காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 6 வாரங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் தற்காலிகமாக 4 நாட்கள் மட்டும் போர் நிறுத்தி வைக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் சுமார் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், 1,200 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர் ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். பணயக்கைதிகள் வரும் வியாழக்கிழமை முதல் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக்கைதிகளுக்கும் கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்படுவதை வரவேற்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 150 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது. இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒப்பந்தம் உறுதியானது.
விளம்பர, சந்தா வருவாய்:
இந்நிலையில் " விளம்பரங்கள் மற்றும் சந்தாக்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கம்/கிரசன்ட் ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்கப்படும்" என எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைக்கும், காஸாவை ஆளும் ஹமாஸுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், காசாவின் மிகப்பெரிய அல் ஷிஃபா மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கான பொருட்கள் இல்லாமல் செயலிழந்து உள்ளது. அந்த மருத்துவமனைக்கு கீழ் சுரங்கம் அமைத்து ஹமாஸ் தலைமை செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் அதனை அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் எலான் மஸ்க், காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உதவி நிறுவனங்களுக்கு தகவல் தொடர்பு மற்றும் இணையம் துண்டிக்கப்பட்ட பிறகு இணைப்பை ஸ்டார்லிங் செயற்கைக்கோள் வழங்கும் என்று அறிவித்திருந்தார்.
ஸ்டார்லிங்க் என்பது தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணையத்தை வழங்குவதற்காக மஸ்க்கின் விண்வெளி விமான நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் வலையமைப்பாகும். ஒரு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தோராயமாக ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் திட்டத்தில் சுமார் 42,000 செயற்கைக்கோள்களைக் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.