வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு நன்மைகளை எந்த அளவிற்கு தருகிறதோ அதேபோல் தீமைகளையும் தருகிறது.


ஏ.ஐ. தொழில்நுட்பம்:


செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்ற தொழில் நுட்பம், தொடர் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், பல சவால்களையும் மனிதர்களுக்கு தந்து வருகிறது. சவால்களை தாண்டி, அறிவியல் தொடர்பான ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் திறனை கொண்டுள்ளது.


செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்தது ஓபன்ஏஐ நிறுவனம். அந்த நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அறியப்பட்டவர்கள் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனும் தலைவர் கிரெக் ப்ரோக்மேனே ஆவர்.


ஓபன்ஏஐ நிறுவனத்தில் அடுத்தடுத்து அதிரடி:


ஓபன்ஏஐ நிறுவனத்தை இணைந்து உருவாக்கிய சாம் ஆல்ட்மேன், நிறுவனத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கிரெக் ப்ரோக்மேன் விலகினார். இது, ஏஐ துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


அவர், நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுந்த நிலையில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களுடன் சாம் ஆல்ட்மேன் வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் இருக்கவில்லை என நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


இந்த நிலையில், சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைய உள்ளனர். இது, பெரும் திருப்பமாக அமைந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏஐ பிரிவில் ஆராய்ச்சி துறையை இருவரும் வழிநடத்த உள்ளனர்.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையும் சாம் ஆல்ட்மேன்:


இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா வெளியிட்ட அறிவிப்பில், "ஓபன்ஏஐ உடனான எங்கள் கூட்டாணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தயாரிப்பு வரைபடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். மைக்ரோசாப்ட் இக்னைட் மாநாட்டில் நாங்கள் அறிவித்த அனைத்தையும் புதுமைப்படுத்துவதை தொடர்ந்து ஆதரிக்கிறோம்.


எங்கள் திறன் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களைத் தொடர்ந்து ஆதரிக்கிறோம். சக ஊழியர்களுடன் இணைந்து, புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் இணைவார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் வெற்றிக்குத் தேவையான வளங்களை அவர்களுக்கு வழங்குவதற்கு எதிர்நோக்குகிறோம்.


இந்த புதிய குழுவின் CEO ஆக நீங்கள் சேர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சாம், புதுமைக்கான புதிய வேகத்தை அமைத்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சுயாதீன அடையாளங்கள் மற்றும் கலாச்சாரங்களை உருவாக்க நிறுவனர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு எப்படி இடம் கொடுப்பது என்பது பற்றி பல ஆண்டுகளாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்" என குறிப்பிட்டுள்ளார்.