பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போர், உலக நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள இஸ்ரேல் போரால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை, 12,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் பெண்களுமே ஆவர்.


ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் வலியுறுத்தி வரும் நிலையில், போர் நடக்கும் பகுதியில் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்ல போரை ஒத்திவைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், எந்த விதமான கோரிக்கைக்கும் இஸ்ரேல் உடன்படவில்லை.


காசாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படுமா?


போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் போரை உடனடியாக தள்ளி வைக்கக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நவம்பர் 16ஆம் தேதியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த நிலையில், ஐந்து நாள்களுக்கு போரை தள்ளி வைக்கும் வகையில் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு, அமெரிக்க ஆகியவைக்கிடையே உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஐந்து நாள்களில், தேவையான அனைத்து உதவிகளையும் காசாவுக்கு எடுத்து செல்லப்பட திட்டமிடப்பட்டு வருகிறது. 


இதனை, விமானகள் கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது. பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தால் போரை தள்ளிவைக்க உடன்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.


பேச்சுவார்த்தையில் செம்ம ட்விஸ்ட்:


"போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு மோதலை நிறுத்தி கொள்வார்கள். அதற்காக, முதற்கட்டமாக 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணயக்கைதிகள் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்படுவார்கள்" என ஆறு பக்க விரிவான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முற்றிலுமாக மறுத்துள்ளதாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. "இது தவறான செய்தி. இப்போதைக்கு எந்த உடன்படிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை" என நெதன்யாகு கூறியுள்ளார். தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு இடையே உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இரண்டு அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகள் மறுத்துள்ளனர்.


போர் நிறுத்தம் குறித்து தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்திக்கு வெள்ளை மாளிகை, எந்த விதமான எதிர்வினையும் ஆற்றவில்லை. கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்பட்டதாக அரபு நாட்டு தூதர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.


இந்த பேச்சுவார்த்தையில், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு, அமெரிக்கா ஆகியவை நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவர்களின் சார்பாக மத்தியஸ்தர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.