உக்ரைன் மீதான ரஷியா போர் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால், அக்டோபர் மாதம் தொடங்கி ரஷியா தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, உக்ரைன் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது தாக்குதலை ரஷியா மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்களில் குடிநீர் மற்றும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குளிர் அங்கு தொடர்ந்து வீசி வரும் நிலையில், மின் நிலையங்கள் பெரும் அழுத்தத்தை சந்தித்துள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் பலத்த சத்தம் கேட்டதாக கிவ்வில் உள்ள செய்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பாளர்களை நிலத்தடி நிலையங்களில் தங்க அனுமதிப்பதற்காக மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
"ரஷியாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் மின்சாரம் இல்லாமல் இருக்கிறது. மத்திய நகரங்களான பொல்டாவா மற்றும் கிரெமென்சுக் ஆகியவற்றிலும் மின்சாரம் இல்லை.
சேதத்தின் அளவு மதிப்பிட்டு வருகிறது. நாடு முழுவதும் வான்வழி தாக்குதல் சைரன்கள் ஒலித்து கொண்டே இருக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.
தெற்கு நகரமான க்ரிவி ரிக் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக இரண்டு பேர் கொல்லப்பட்டனர். குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தாக்குதல் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் ஜெர்மன் கலுஷ்செங்கோ கூறுகையில், "எரிசக்தி உள்கட்டமைப்பு மீது தொடர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவசர மின்வெட்டு ஏற்படும்" என்றார்.
பிப்ரவரியில் ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு, ரஷியா கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் நகரம் ஆகும். இது உக்ரைனிய எதிர் தாக்குதலின் மையமாக இருந்து வருகிறது. 2014இல் ரஷியா இணைத்து கொண்ட கிரிமியா தீபகற்பத்திற்கான ஒரே நிலப் பாதை, இந்த நகரத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறது.
அதேபோல, உக்ரைனை இரண்டாக பிரிக்கும் டினிப்ரோ ஆற்றின் வாய்ப்பகுதியும் கெர்சன் கீழ்தான் வருகிறது. ரஷியாவால் நிறுவப்பட்ட அதிகாரிகள் சமீபத்திய வாரங்களாகவே, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர்.
செப்டம்பர் மாதம், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினால், ரஷியாவில் இணைவதாக அறிவித்த நான்கு பகுதிகளில் கெர்சனும் ஒன்றாகும். அணு ஆயுதத்தின் கீழ் கெர்சன் கொண்டு வரப்படுவதாக ரஷியா அப்போது அறிவித்திருந்தது.