ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியிருந்தது. சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பினார்.
காரசார வாக்குவாதம்
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை விருந்தாளியாக வைத்து கொண்டு, அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நாட்டிற்கு ஐ.நா.வில் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை" என்றார்.
இந்நிலையில், ஜெய்சங்கரின் கருத்துக்கு பிலாவல் பூட்டோ கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் என அவர் விமர்சித்துள்ளார்.
கசாப்பு கடைக்காரர்:
"ஒசாமா பின் லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவர்தான், இந்தியாவின் பிரதமர். பிரதமராக வரும் வரை, இந்த நாட்டுக்கு (அமெரிக்கா) வருவதற்கு அவருக்கு தடை வதிக்கப்பட்டிருந்தது.
இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரதமர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்றால் என்ன? ஹிட்லரின் எஸ்எஸ் ராணுவ அமைப்பிடமிருந்துதான் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு உத்வேகம் பெறுகிறது" என பிலாவல் பூட்டோ கூறியுள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும் நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு குறித்த தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஜெய்சங்கர் சென்றிருந்தார்.
இதில், பங்கேற்று பேசிய ஜெய்சங்கர், "மற்றொரு 9/11 இரட்டை கோபுர தாக்குதலையோ 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலையோ நடத்த அனுமதிக்க முடியாது.
கடந்த 20 ஆண்டுகளில், பயங்கரவாதம் குறிப்பிடத்தக்க வகையில் எதிர்க்கப்பட்டுள்ளது. பயங்கரவாத்தை நியாயப்படுத்துவது சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது" என்றார். ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் ருச்சிரா காம்போஜ் தலைமையில் இந்த விவாதம் நடைபெற்றது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதில் இருந்தே இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதரை அவரது பதவியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.