உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதை எதிர்க்கும் விதமாக ரஷ்ய அரசு அமெரிக்காவுக்கு ராக்கெட் எஞ்சின்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதற்காக முடிவு செய்துள்ளதாக, ரஷ்யாவின் அரசு விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோஸ் அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்துள்ளார். 


`இது போன்ற சூழலில், நாங்கள் தயாரிக்கும் உலகின் தலைசிறந்த ராக்கெட் எஞ்சின்களை எங்களால் அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது.. அவர்களுக்குப் பறக்க வேண்டும் என்றால் வேறு எதையாவது பயன்படுத்திக் கொள்ளட்டும்.. துடைப்பத்தைக் கூட பயன்படுத்தட்டும். எனக்கு தெரியாது’ என்று டிமிட்ரி ரோகோசின் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். 


ரஷ்யாவின் அரசு விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோஸ் அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் கூறியவற்றின்படி, கடந்த 1990களின் தொடக்கத்தில் இருந்து ரஷ்யா அமெரிக்காவுக்கு இதுவரை மொத்தமாக 122 RD 180 ராக்கெட் எஞ்சின்களை அளித்துள்ளது. அவற்றுள் 98 ராக்கெட் எஞ்சின்கள் அமெரிக்காவின் அட்லஸ் ராக்கெட்களைப் பறக்கவிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 



மேலும், அமெரிக்காவுக்கு ஏற்கனவே அளித்துள்ள ராக்கெட் எஞ்சின்களைப் பழுது பார்க்கும் பணிகளையும் ராஸ்காஸ்போஸ் அமைப்பு மேற்கொள்ளாது எனக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசியுள்ள ராஸ்காஸ்மோஸ் அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசின், அமெரிக்காவிடம் தற்போது கைவசம் இருக்கும் 24 எஞ்சின்களும் ரஷ்யத் தொழில்நுட்ப உதவி இல்லையென்றால் பயன்படுத்த முடியாது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். 


மேற்கத்திய நாடுகள் உக்ரைன் விவகாரத்தின் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில் அதனை எதிர்க்கும் விதமாக ஐரோப்பாவில் விண்வெளிப் பயணங்களுக்கான ஒத்துழைபை ரஷ்ய அரசு அளிக்காது எனக் கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோஸ் பிரென்ச் கயானா பகுதியில் உள்ள கௌராவ் விண்வெளி நிலையத்தில் இருந்து செலுத்தப்படும் ஐரோப்பிய ராக்கெட்களுக்காக உதவி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 



டிமிட்ரி ரோகோசின்


தொடர்ந்து, ரஷ்ய அரசு இதுவரை பிரிட்டிஷ் செயற்கைக்கோள் நிறுவனமான `ஒன்வெப்’ நிறுவனத்திடம் பெற்ற செயற்கைக்கோள்கள் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று உறுதிமொழி கோரியுள்ளது. பிரிட்டிஷ் அரசு பங்குதாரராக அங்கம் வகிக்கும் `ஒன்வெப்’ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கஜகஸ்தான் நாட்டிலுள்ள பைகனூர் காஸ்மோட்ரோமில் இருந்து செலுத்தப்படும் ரஷ்ய விண்வெளிப் பயணங்களுக்கு முழுமையாகத் தடை விதித்துள்ளதாகக் கூறியுள்ளது. 


ராஸ்காஸ்மோஸ் அமைப்பின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் இனி ராஸ்காஸ்மோஸ் அமைப்புக்கும், பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கும் தேவைப்படும் வகையில் இரு வகையான பயன்பாட்டுக்கான விண்கலங்களை உருவாக்குவதில் ரஷ்ய அரசு கவனம் செலுத்தும் எனக் கூறியுள்ளார். ராஸ்காஸ்மோஸ் அமைப்பு ஜெர்மனி நாட்டுடனான விண்வெளி ஆய்வுக்கான ஒத்துழைப்பையும் கைவிடுவதாக முடிவு செய்துள்ளது.