காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த குண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலா ஷங்கர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றார். கல்லூரியில் படிக்கும்போதே பகுதி நேர வேலையாக அங்கு உள்ள ரெஸ்டாரன்ட், ஹோட்டல் போன்றவற்றில் சமையல் உதவியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது.



மருத்துவ படிப்பை முடித்த அவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் பகுதியில் தனக்கு சொந்தமாக ரெஸ்டாரன்ட் உணவகத்தை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக வரும் மாணவர்களுக்கு, தங்கும் விடுதி, உணவு வசதி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொடுத்து அவர்களுக்கு அடைக்கலம் தந்து சேவை செய்து வருகிறார்.





இந்நிலையில் கடந்த சில தினங்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துவரும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. உக்ரைன் நாட்டில் கிவ், கார்கிவ் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் வெளியே செல்லத் தடை விதித்து உணவகம், ஸ்டோர் மார்க்கெட்டுகள் போன்றவைகளை தவிர்த்து அங்கு செயல்பட்டு வரும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்க இடம் இன்றியும் உணவு இன்றியும் உயிருக்கு பயந்து ரயில்வே சுரங்கப்பாதை, கட்டடங்களின் அடித்தளத்தில் சென்று தஞ்சம் புகுந்தனர்.



இக்கட்டான சூழ்நிலையில் உணவு இன்றி தவித்து வந்த தமிழக மாணவர்களுக்கு ஶ்ரீபெரும்புதூரை சேர்த்த மருத்துவர் பாலா சங்கர், மருத்துவ மாணவர்கள் அப்பு கிருஷ்ணன், சஜி குமார் உள்ளிட்ட முவரும் தன்னலம் கருதாமல் அங்குள்ள சுற்றுப்புற கிராமங்களில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி சமைத்து கடந்த 8 நாட்களாக தமிழக மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இவர்களின் மனிதாபிமான செயல் தமிழக மாணவர்களின் பெற்றோர்களை மகிழ்ச்சி அடைய செய்ததோடு மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.