உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், தற்போது இருக்கும் உக்ரைன் அரசு கவிழ்ந்தால் ரஷ்ய அரசு உக்ரைன் நாட்டின் முன்னாள் அதிபரும், நாடு கடத்தப்பட்டவருமான விக்டர் யானுகோவிச்சை அதிபராக நியமிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதுவரை யாரும் பெற்றிடாத வகையில், அதிபர் பதவியில் இருந்து இரண்டு முறை தூக்கியெறியப்பட்ட விக்டர் யானுகோவிச் ரஷ்ய அரசின் தேர்வாக இருக்கிறார். உக்ரைன் அதிபராகப் பதவியேற்பதற்கு விக்டர் யானுகோவிச் தயார் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


1950ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் உக்ரைன் நாட்டின் யெனாகியெவோ பகுதியில் இரும்புத் தொழிலாளிக்கும், செவிலியர் ஒருவருக்கும் மகனாகப் பிறந்த விக்டர் யானுகோவிச் தன்னுடைய இளமையில் மூர்க்கமான குற்றங்களுக்காக இரண்டு முறையில் சிறையில் இடைக்கப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 


கிழக்கு உக்ரைனில் சோவியத் அரசின் நிலக்கரி தொழிற்சாலையில் போக்குவரத்து அதிகாரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய விக்டர் யானுகோவிச், 2000ஆம் ஆண்டு பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து அவர் சுமார் 3 மில்லியன் மக்கள் வாழும் டோனெட்ஸ்க் பகுதியின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2002ஆம் ஆண்டு, அப்போதைய உக்ரைன் அதிபர் லியோனிட் குச்மா, விக்டர் யானுகோவிச்சைப் பிரதமராக நியமித்தார். 


2004ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார் விக்டர் யானுகோவிச். எனினும், கீவ் நகரத்தில் ஆரஞ்ச் புரட்சி என்றழைக்கப்பட்ட மாபெரும் போராட்டங்களில், அந்த ஆண்டின் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 2006 முதல் 2007 வரையிலான ஆண்டுகளின் போது இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற  விக்டர் யானுகோவிச், தொடர்ந்து உக்ரைனின் மிகப் பிரபலமான அரசியல்வாதியாக அறியப்பட்டார். 



விக்டர் யானுகோவிச்


2010ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விக்டர் யானுகோவிச், தனது பதவிக் காலத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான உக்ரைன் நாட்டின் உறவுகளை வலுப்படுத்தினார். 


ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு, கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு ஒப்பந்ததை மறுத்துள்ளார் விக்டர் யானுகோவிச். இது 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 18 முதல் 22 வரையிலான தேதிகளில் யாரும் பார்க்காத அளவில் மிகப்பெரிய போராட்டமாகவும் மோதலாகவும் மாறியது. இதில் சுமார் 88 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, அதிபர் விக்டர் யானுகோவிச்சின் அதிகாரம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. 


ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் காரணமாக, தன்னுடைய அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட விக்டர் யானுகோவிச் சில மணி நேரங்களில் நாட்டின் தலைநகரை விட்டு வெளியேறியதோடு, அவரது அரசும் கவிழ்ந்தது. 



ரஷ்ய அதிபர் புடினுடன் விக்டர் யானுகோவிச்


2004ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைப் பகிரங்கமாக ஆதரித்தார் விக்டர் யானுகோவிச். தன்னை எப்போதும் ரஷ்யாவின் ஆதரவாளராகக் காட்டிக் கொள்ள விரும்பிய விக்டர் யானுகோவிச் உக்ரைனின் பொருளாதார சூழல் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டுவது ரஷ்யாவுடனான தொழில் உறவைப் பாதிக்கும் என வாதிட்டார் விக்டர் யானுகோவிச். 


உக்ரைனின் செல்வாக்கான கால்பந்து கிளப்பான ஷாக்தர் டோனெட்ஸ்க் கிளப்பின் உரிமையாளரும், பில்லியனரும் ஆன ரினத் அக்மெதாவ், விக்டர் யானுகோவிச்சின் அரசியல் நண்பர் ஆவார். தன்னுடைய அதிகாரத்தை இழந்தவுடன் ரஷ்யாவில் விக்டர் யானுகோவிச் தஞ்சம் புகுந்தது, ரஷ்யாவுடனான அவரின் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. 


தனது பதவி பறிக்கப்பட்ட பிறகு, உக்ரைனை விட்டு வெளியேறியதும், ரஷ்ய நகரமான ராஸ்டோவ் ஆன் டானில் செய்தியாளர்களைச் சந்தித்த விக்டர் யானுகோவிச், தனது நாட்டைப் பிரிப்பதையும், அதன் மீதான ராணுவ நடவடிக்கைகளையும் கண்டித்ததோடு, தனக்கும், தனது குடும்பத்தினருக்கு உக்ரைனில் உயிருக்குப் பாதுகாப்பான சூழல் இல்லாததால் வெளியேறுவதாகவும், பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட்டால் மீண்டும் நாடு திரும்புவேன் எனவும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.