உக்ரைனில் போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில், அங்குள்ள ரஷிய வீரர்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஊறுகாயை மட்டுமே உட்கொண்டு போர் புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய ராணுவ வீரர்கள் முகாமில், உணவு உண்ணும் பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்குள்ள பகுதிகளை சோதனையிட்டதில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைன் ராணுவத்தினர் எடுத்துள்ள விடியோவில் ராணுவ வாகனங்கள் முழுக்க உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பாட்டில்களில் ஊறுகாய் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. ரஷ்யப் படைகள் கியேவ் மற்றும் மரியுபோல் நகரங்கள் மீது குண்டுவீசி வருகின்றன. கார்கிவ் நகரிலும் ரஷ்யாவின் குண்டுவீச்சு தொடர்கிறது.
அதிகரித்து வரும் இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் அமைதி உடன்படிக்கைக்கான வாய்ப்பு உள்ளது என உக்ரைன் எதிர்பார்க்கிறது. உக்ரைன் மிக சிறிய நாடுதான். ரஷ்யா தனது முழு பலத்தை பயன்படுத்தினால் உக்ரைனை மொத்தமாக கைப்பற்ற முடியும். ஆனாலும் உக்ரைனை பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறிக்கொண்டு இருக்கிறது.
ரஷ்ய ராணுவத்தின் பலம் நினைத்தது போல இல்லை என்று சொல்லும் அளவிற்கு ரஷ்யா இந்த போரில் முன்னேற முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. ரஷ்யப் படைகளால் சூழப்பட்ட உக்ரைனின் மரியுபோலில் இருந்து பாதுகாப்பான மனித நடைபாதை வழியாக சுமார் 20,000 பேர் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
தற்போது வரை உக்ரைனை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனைத் தாண்டியுள்ளது. போரில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ரஷிய ராணுவ முகாமின் உணவு உண்ணும் பகுதியில் உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடத்திய போது, அதில் ரஷிய வீரர்கள் உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் ஊறுகாயை மட்டுமே தின்று போர் புரிந்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் வீரர்கள் பதிவிட்ட விடியோவையும் உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், ராணுவ வாகனங்கள் முழுவதும் மூட்டை மூட்டையாக உருளைக்கிழங்கும், வெங்காயம் மற்றும் பாட்டில்களில் ஊறுகாய் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோவைக் கண்டு உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், சிலர் இதுமட்டும் அவர்கள் உண்ணும் உணவாக இருக்காது, இன்றைய மெனுவில் இது இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
சிலர், இந்த ட்ரக்கில் இது மட்டும் இருந்திருக்கலாம், வேறு ட்ரக்கில் வேறு உணவுப்பொருட்கள் இருக்கும் என்று கூறு வருகின்றனர்.