Sunshine Diet: பச்சிளங் குழந்தையை பட்டினி போட்டு கொன்ற சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சருக்கு, 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பச்சிளங் குழந்தையை கொன்ற தந்தை:
ரஷ்யாவைச் சேர்ந்த 44 வயதான சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் மாக்சிம் லியூட்டி. ஊட்டச்சத்து உணவு மறுக்கப்பட்டதால், லியூட்டியின் மகன் "நிமோனியா மற்றும் மெலிவினால்" கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி இறந்தார். இதுதொடர்பான விசாரணையில் சோச்சி நகரைச் சேர்ந்த லியூட்டி, சூரிய ஒளியை மட்டுமே தனது மகனுக்கு முக்கிய உணவாக வழங்க முடிவு செய்தது கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்தது கண்டறியப்பட்டது. அதாவது தனது மகனுக்கு நீண்ட காலத்திற்கு உணவு மற்றும் தண்ணீர் எதுவும் வழங்காமல், சூரிய ஆற்றலையே உணவாக எடுத்துக் கொள்ளும் சன் ஷைன் எனும் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றியது உறுதியானது. அதோடு, லியூட்டி தனது மனைவியான ஒக்ஸானா மிரோனோ, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையும் தடுத்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து, லியூடிக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு 860 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது.
குழந்தையின் உடல்நலம் பாதிப்பு:
உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, “மகனை கடினப்படுத்துவதற்காக அவனை ஒரு நாளைக்கு ஒரு முறை லியூட்டி குளிர்ந்த நீரில் குளிப்பாட்டியுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் குழந்தையை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல மறுத்துள்ளார். உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. கணவர் சொன்ன உணவுக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மனைவி பின்பற்ற, மூன்றரை பவுண்ட் எடையில் பிறந்த குழந்தையின் உடல் நலனை மேலும் பாதித்துள்ளது. விசாரணையின் போது, ”தாயின் விருப்பப்படியே தான் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றியதாகவும், குறைமாதம் மற்றும் குறைந்த எடையில் குழந்தை பிறந்தது தெரிந்து இருந்தால், நான் அப்போதே மருத்துவரை அணுகி இருப்பேன்” என லியூட்டி தெரிவித்துள்ளார். ஆனால் அது அனைத்தும் பொய் என விசாரணையில் உறுதியாகியுள்ளது.
காதலிக்கு 2 ஆண்டுகள் சிறை:
இதுதொடர்பாக, மிரனோவாவின் தாயார் கலினா பேசுகையில், லியூட்டி ஒரு மோசமான நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டினார். என் மகள் அவருடன் இருப்பதை நான் எதிர்த்தேன். நான் எல்லாவற்றையும் பார்த்தேன். லியூட்டி பைத்தியம் என்று அவளிடம் சொன்னேன், ஆனால் அவள் என் பேச்சைக் கேட்கவில்லை. அவள் ஒரு பன்றியைப் போல அங்கே வாழ்ந்தாள்.
மின்ரோவாவின் உறவினர்கள், அவர் பலமுறை கணவரை விட்டு வெளியேற விரும்பியதாகவும், குழந்தைக்கு உணவளிக்க வேண்டாம் என்று அவர் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். மிரனோவா ரகசியமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். மிரோனோவா தனது தாய்மையின் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதற்காகவும், ஒரு குழந்தைக்கு உதவி வழங்கத் தவறியதற்காகவும் அவளுக்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..