Tesla Layoff: மின்சார கார் உற்பத்தி நிறுவனமானடெஸ்லா, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிற்கு சொந்தமானதாகும்.


14,000 பேரின் வேலை பறிப்பு?


எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா,  தனது உலகளாவிய பணியாளர்களில் 10% க்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. போலியான பணியிடங்களை கண்டறிந்து அகற்றுவதன் மூலம், அநாவசிய செலவுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முடிவு நிறுவனம் முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால், சுமார் 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அனுப்பியதாக வெளியான ஒரு மின்னஞ்சலில், " நிறுவனத்தின் அபரிவிதமான வளர்ச்சி போலியான பணியிடங்களுக்கு வழிவகுத்துள்ளது. எனவே, நிறுவனத்தில் போலி பணியிடங்களை ஒழிப்பதோடு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செலவுக் குறைப்பு நடவடிக்கையும் அவசியம். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நாங்கள் நிறுவனத்தை முழுமையாக மதிப்பாய்வு செய்துள்ளோம். அதன்படி, உலகளவில் நமது பணியாளர்களின் எண்ணிக்கையை 10% க்கும் அதிகமாக குறைக்கும் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  நான் வெறுக்க எதுவும் இல்லை, ஆனால் அது செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


டெஸ்லா கண்ட சரிவு:


டெஸ்லா நிறுவனம் தனது மின்சார வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்க, சந்தையில் அடுத்து அதன் விலையில் பல்வேறு சலுகைகள் வழங்கின. ஆனாலும் அந்நிறுவன வாகன விற்பனை சரிவை சந்தித்து இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் தான், டெஸ்லாவில் இருந்து பணிநீக்க நடவடிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்கின் இந்திய வருகைக்கு முன்பு, இந்த தகவல்கள் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்தியா வரும் எலான் மஸ்க்:


ஏப்ரல் மாதத்தின் நான்காவது வாரத்தில் எலான் மஸ்க் இந்தியா வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”பிரதமர் நரேந்திர மோடியை காண ஆவலுடன் உள்ளேன்” என குறிப்பிட்டு இருந்தார். இந்த சந்திப்பின்போது, இந்திய சந்தையில் டெஸ்லா கார்கள் விற்பனையை தொடங்குவது, உள்நாட்டிலேயே சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து உற்பத்தி ஆலையை தொடங்குவது என்பது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியா ஒரு புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்த பிறகு, மின்சார வாகனங்களின் இறக்குமதி மீதான வரிகளை கிட்டத்தட்ட 85 சதவ்கிதம் வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் ₹ 4,150 கோடி முதலீடு செய்ய வேண்டும் மற்றும் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை அமைக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படு. அப்படி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது.