தென் ஆப்ரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரத்தில் தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் கரோனா வைரஸ் உருமாறி ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, லாம்டா பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றில் தற்போது உலகம் முழுவதும் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வைரஸின் தாக்கமே அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், தற்போது தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 4 மாதங்களாகத் தென்ஆப்ரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் 48 சதவீதம் அதிகரித்தது. இதற்குக் காரணம் பி.1.1.529 வைரஸின் பரவும் தண்மை தான் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய வைரஸின் உருமாற்றம், அதனுடைய ஸ்பைக் புரோட்டீன் குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. பி.1.1.529 வைரஸ் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களையும் விட்டுவைக்காமல் தாக்குகிறதாம்.
இந்நிலையில், இந்த உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது. இந்த வைரஸ் இப்போது ஆப்ரிக்காவின் போஸ்ட்வானா நகரில் வேகமாகப் பரவி வருகிறது. இது அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் ஆப்ரிக்க கண்டத்தையும் தாண்டி இது பரவ வாய்ப்புள்ளதால் வேறு எங்கும் பரவி இருக்கிறதா என்று உலகம் முழுவதுமே ஆராய்ச்சியாளர்கள் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் ஆப்ரிக்காவில் கடந்த சில நாட்களாகப் பரவும் தொற்றில் 75% இந்த உருமாறிய பி.1.1.529 எனும் புதிய வகை கொரோனா வைரஸாலேயே ஏற்படுகிறது. வேகமாகப் பரவுவது மட்டுமல்ல மிக வேகமாக உருமாறக்கூடியதாகவும் இந்த வைரஸ் இருக்கிறது.
மேலும் படிக்க: