ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பினார் என செய்தி வெளியாகியுள்ளது. ஜெனரல் ஜிவிஆர் டெலிகிராம் சேனலில் புதன்கிழமை அன்று இந்த தகவல் வெளியிடப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இருப்பினும், இந்த கொலை முயற்சி எப்போது நடந்தது என்பது தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்ததிலிருந்து புதினின் உடல்நிலை மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன.


புதினை பொறுத்த வரையில், 2017இல் தான் குறைந்தது ஐந்து படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியதாக அவர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.


புதினுடைய லிமோசினின் (பாதுகாப்பு வாகனம்) இடது முன் சக்கரம் வெடித்ததில் பலத்த சத்தம் வெளிப்பட்டது. காரிலிருந்து புகை வெளியேறியபோதிலும் அது விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு எடுத்த செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் ரஷிய அதிபர் காயமடையவில்லை, ஆனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.


news.co.au போன்ற பிற செய்தி நிறுவனங்களும் இந்தச் சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு மத்தியில் புதின் மாற்று வாகனத்தில் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.


"வீட்டிற்கு செல்லும் வழியில், சில கிலோமீட்டர் தொலைவில், முதல் எஸ்கார்ட் கார் ஆம்புலன்ஸ் வந்ததன் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டது. திடீரென தடை ஏற்பட்டிருந்தாலும், இரண்டாவது எஸ்கார்ட் கார் நிற்காமல் மாற்று பாதையில் சுற்றிச் சென்றது" என செய்தி வெளியாகியுள்ளது.






உக்ரைனில் இராணுவ இழப்புகளை ரஷியா சந்தித்து வரும் நிலையில், அதன் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட தொடர்ச்சியான காரணங்களை மேற்கோள் காட்டி, ரஷிய அரசியல்வாதிகள் குழு, புதினுக்கு எதிராக தேச துரோக குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை அதிகாரத்திலிருந்து அகற்றுமாறு ரஷிய மேலவை சபையிடம் முறையிட்ட ஒரு வாரத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


செயின்ட் பீட்டர்ஸ்பர்க், மாஸ்கோ மற்றும் பல பிராந்தியங்களைச் சேர்ந்த 65 நகராட்சிப் பிரதிநிதிகள், புதினை ராஜினாமா செய்யக் கோரி திங்களன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.