சேற்றில் சிக்கிய இரண்டு பெண் யானைகளை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கென்யா நாட்டில் உள்ள காட்டுப்பகுதியில் , இரண்டு பெண் யானைகள் வறட்சி காரணமாக அங்குள்ள குட்டை ஒன்றில் நீர் அருந்த வந்திருக்கின்றன. அந்த குட்டை தண்ணீர் இல்லாமல் சேறும் சகதியுமாக இருந்திருக்கிறது. இதனை அறியா யானைக்குட்டிகள் ஒரு பக்கம் சாய்ந்தவாரு , சேற்றில் சிக்கிவிட்டன. இதனால் அவைகளால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக சேற்றிலேயே சிக்கிக்கிடந்ததை கண்ட உள்ளூர் வாசிகள் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் ஹெலிகாப்டர் மூலம் அதிரடியாக களமிறங்கிய Sheldrick Wildlife Trust , KWS மற்றும் Wildlife Works குழுவினர் யானைகளை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.
முதலில் சேற்றுக்குள் இறங்கி இரண்டு முதல் மூன்று வீரர்கள் யானையின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு கம்பி ஒன்றின் மூலம் பிணைப்பை ஏற்படுத்துகின்றனர். இடையிடையே யானை தும்பிக்கையால் சில சைகைகளை செய்வது , என்னை காப்பாற்றுங்கள் என்பது போல இருக்கிறது. கம்பிகளால் பிணைப்பை ஏற்படுத்திய பின்னர் , காவி நிறத்தால் ஆன ஒரு தடிமனான ரோப் கொண்டு அந்த பிணைப்பு இணைக்கப்படுகிறது. பின்னர் ஒரு டிராக்டரை ஓட்டி வருகிறார் உள்ளூர் வாசி , ரோப்பின் மறுமுனை டிராக்டரில் கட்டப்பட்டு இழுக்கப்படுகிறது. முதல் முயற்சியில் யானைக்குட்டி பாதி வெளியே வந்தாலும் அதனால் எழுந்திருக்க முடியவில்லை. இதே போல இரண்டாவது முறை செய்யும் பொழுது , யானைக்குட்டி முழுவதுமாக சேற்றிலிருந்து வெளியேறி எழுந்து நின்று ரிலாக்ஸ் செய்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இதே முறையில் இரண்டாவது யானையையும் சேற்றிலிருந்து வெளியேற்றுகின்றனர். அதன் பிறகு யானைக்குட்டிகள் இரண்டும் மகிழ்ச்சியாக காட்டை நோக்கி ஓடுவதை காண முடிகிறது.
இந்த வீடியோவை Sheldrick Wildlife Trust தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். இந்த வீடியோ 71 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் யானைக்குட்டிகளை காப்பாற்றிய மீட்பு குழுவினருக்கு நெட்டிசன்கள் , நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.