மத்திய கிழக்கில் அமைந்துள்ள லெபனான் நாட்டின் தெற்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஹிஸ்புல்லா இயக்கம். கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசியல் இயக்கம் ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. இந்த இயக்கத்திற்கு முக்கிய ஆதரவாக இருந்து வருவது ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் ஆவர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் முக்கிய எதிரியாக இருப்பது ஹிஸ்புல்லா இயக்கம்தான். ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு, ஆண்டுக்கு லட்சக்கணக்கான டாலர்களை ஈரான் வழங்கி வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வருகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான போரில் திருப்பம்:
இந்த நிலையில், ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையேயான போரில் ஹமாஸ் அமைப்பினருடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்திருப்பது உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான போர் 8ஆவது நாளை எட்டியிருக்கும் சூழலில், ஹிஸ்புல்லா இயக்கத்தின் துணை தலைவர் நைம் காசிம், இஸ்ரேல் போரில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
லெபனான் நாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் பேசிய நைம் காசிம், "ஹிஸ்புல்லாவாகிய நாங்கள் இந்த மோதலுக்கு பங்களித்து வருகிறோம். எங்கள் கொள்கை திட்டத்திற்கு உட்பட்டு தொடர்ந்து பங்களிப்போம். நாங்கள் போரில் பங்கு கொள்ள முழுமையாக தயாராக இருக்கிறோம். நடவடிக்கைக்கான நேரம் வரும்போது, நாங்கள் அதை எடுப்போம்" என்றார்.
ஹமாஸ் அமைப்பினருடன் கைக்கோர்க்கும் ஹிஸ்புல்லா இயக்கம்:
இந்த போரில் ஹிஸ்புல்லா இயக்கம் தலையிடக் கூடாது என சர்வதேச அளவில் அழுத்தம் எழுந்துள்ள நிலையில், அதை ஹிஸ்புல்லா இயக்கம் மறுத்து வருகிறது. இது குறித்து பேசிய நைம் காசிம், "முக்கிய நாடுகள், அரபு நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும், போரில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். அது எங்களை பாதிக்காது. ஹிஸ்புல்லாவுக்கு அதன் கடமைகள் தெரியும்" என்றார்.
இதற்கிடையே, லெபனான் தலைநகர் பெய்ரூட் நகருக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சென்றுள்ளார். ஹமாஸ் அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், ஆயுதம் ஏந்தி கொண்டு காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள், 1,300 பேரை படுகொலை செய்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் அப்பாவி மக்கள் ஆவர்.
இதற்கு பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், காசாவில் குண்டு மழை வீசி வருகின்றனர். இதில், 1,900 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில், பெரும்பான்மையானோர் அப்பாவி மக்கள் ஆவர். 600 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே ஹிஸ்புல்லா இயக்கத்தையும் பாலஸ்தீன கூட்டு இயக்கங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.