ரஷ்யாவில் மக்கள் கூடும் சந்தை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்கிற ரீதியில் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கியுள்ள ரஷ்யா - உக்ரைன் இடையேயான  போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து பதிலடி கொடுத்து வருகிறது.  


இந்த போர் உலகளவில் பெரும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகிறது. போரை கைவிட சொல்லி உலக நாடுகள் வலியுறுத்தினாலும் ரஷ்யா செவிசாய்க்கவே இல்லை. இப்படியான நிலையில் உக்ரைனில் சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அந்த இடத்தில் கடந்த இரு தினங்கள் முன்பு ஆளில்லாத விமானம் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்த நிலையில் அதன் பாதிப்பு பெரிதளவில் இல்லை என ரஷ்யா  கூறியுள்ளது. ஆனாலும் உக்ரைனின் இந்த அதிரடி தாக்குதல் எதிர்பாராத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 


இப்படியான நிலையில் ரஷ்யாவின் டோனெட்ஸ்க் நகரில் உள்ள மக்கள் கூடும் சந்தை மீது உக்ரைன் ராணுவம் சரிமாரியாக பீரங்கி தாக்குதல் நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். ஆனால் இந்த தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒருநாள் துக்கமும் அனுசரிக்கப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற சந்தை அருகே மக்கள் கூடி உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதேசமயம் இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என உக்ரைன் மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ரஷ்யா தனது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க: சீனாவில் அதிர்ச்சி! பள்ளி விடுதி கட்டடத்தில் நள்ளிரவில் திடீரென பரவிய தீ.. இதுவரை 13 பேர் உயிரிழப்பு..!