ராமர் கோயிலில் இன்று (ஜனவரி 22) நடைபெறவுள்ள பிரமாண்டமாக கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அயோத்தி நகரம் மட்டுமல்ல, இந்தியாவே தயாராகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். விழா முடிந்த மறுநாளே இந்த கோயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. கும்பாபிஷேகம் மதியம் 12.20 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு பிறகு, ராமர் கோயிலில் துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட 7,000க்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
ஸ்ரீ ராம் ஜென்பபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின்படி, நேற்று (ஜனவரி 21) ராம்லல்லா சிலை பல்வேறு யாத்ரீக தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலிகை மற்றும் புனித நீர் நிரப்பப்பட்ட 114 குடங்களைக் கொண்டு நீராடப்பட்டது. இதுகுறித்து அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், “ கடந்த வியாழக்கிழமை கருவறையில் வைக்கப்பட்ட சிலை தீவிர கண்காணிப்பில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சென்னை, புனே உள்ளிட்ட பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்களால் சடங்குகள் நடத்தப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழா தொடர்பான சடங்குகள் ஜனவரி 16 ம் தேதி சரயு நதி தீர்த்தத்தில் தொடங்கி, திங்கள்கிழமை மதியம் அபிஜீத் முஹூர்த்தத்தில் நிறைவடைகிறது” என தெரிவித்தார். இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை டிவி மற்றும் ஆனலைன் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு நிகழ்ச்சிகள்:
மேற்கு வங்கத்தில் இருந்து ஸ்ரீகோல் மற்றும் சரோத், ஆந்திராவில் இருந்து காதம், ஜார்கண்டில் இருந்து சித்தார், தமிழ்நாட்டிலிருந்து நாதஸ்வரம் - மிருதங்கம் மற்றும் உத்தரகாண்டில் இருந்து ஹூடா கலகர் உள்ளிட்ட முக்கிய இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
ராம் மார்க், சரயு நதிக்கரை மற்றும் லதா மங்கேஷ்கர் சௌக் போன்ற முக்கிய இடங்களிலும் ராமாயணத்தின் பல்வேறு வசனங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களும் வாசிக்கும் நிகழ்ச்சிகளும் இங்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு உட்பட பல மாநில அரசுகள் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளன. மேலும், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற வங்கிகளும் ஜனவரி 22 அன்று அரை நாள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ பங்குச் சந்தைகளும் இன்றைய நாளில் வர்த்தகம் இல்லை என்று அறிவித்துள்ளன.
சிறப்பு கொண்டாட்டங்கள்:
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சிறப்பு கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன் டிசி, பாரிஸ், சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிட்னி உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் 60 நாடுகளில் உள்ள இந்து வெளிநாட்டவர் சமூகம் ஏற்பாடு செய்து வருகிறது.
அயோத்தி நகரமே பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், அயோத்தி மக்கள் தற்போது ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் வேடமணிந்து வீதிகளில் வலம் வருகின்றனர். நிகழ்ச்சியின்போது எந்தவொரு அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, கோயிலை சுற்றி ஒவ்வொரு பிரதான சாலைகளிலும் முள்வேலியுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள் போன்ற சம்பவங்களைச் சமாளிக்க பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தி மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.