Russia Ukraine War:  ரஷ்யாவின் கசன் நகர் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்:


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளையும் கடந்து தொடர்ந்து வருகிறது. அண்மையில் ரஷ்யாவின் அணு மற்றும் ரசாயன ஆயுத படைப்பிரிவு தலைவர், உக்ரைனால் கொல்லப்பட்டார். இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்ய வான்படை 5 பாலிஸ்டிக் ஏவுகளை ஏவியது. அவை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டாலும், கீழே விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 6 தூதரக அலுவலகங்கள் சேதமடைந்தன.  இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், ரஷ்யாவின் கசான் நகரை எட்டு ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவி) தாக்கியுள்ளன.














கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள்:


இதுதொடர்பான தகவல்களின்படி, கமலீவ் அவென்யூ, கிளாரா ஜெட்கின் தெரு, யுகோஜின்ஸ்காயா தெரு, ஹாடி தக்டாஷ் தெரு, கிராஸ்னயா பொசிசியா தெரு மற்றும் ஓரன்பர்க் ட்ராக்ட் தெரு ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.  உக்ரைன் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. வீடியோ காட்சிகளில், கட்டிடங்களுக்குள் புகுந்த ஆளில்லா ட்ரோன்கள், பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறுகிறது. இதனால் பெரும் தீப்பிழம்பும் அந்த கட்டிடங்களில் ஏற்பட்டது.  அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாவிட்டாலும், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதல் அல்கொய்தா அமைப்பால், அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தை நினைவுகூறும் வகையில் உள்ளது.



முன்னெச்சரிக்கைகள் தீவிரம்:


கசான் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சில பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஐந்தாவது பெரிய நகரமான கசான், ரஷ்ய கூட்டமைப்பின் கூட்டாட்சிப் பொருளான டாடர்ஸ்தான் குடியரசின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் வோல்கா மற்றும் கசாங்கா நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. கசான் அதன் கலாச்சார பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது, ஏனெனில் இது ரஷ்ய மற்றும் டார்ட்டர் கலாச்சாரங்களின் மையமாக உள்ளது. இப்படிப்பட்ட சிறப்புமிக்க நகரில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அதிபர் புதினுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆயுத உதவியுடன் உக்ரைன் இந்த போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.