சமீப காலமாக உலகில் வினோதமான நோய்கள் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் வைரஸ் பாதிப்பு குறித்த அச்சத்தில் தற்போது வரை இருக்கிறது. இந்த நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள முக்கிய நடன உகாண்டாவில் வினோதமான வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
டிங்கா டிங்கா வைரஸ்:
இந்த வினோத வைரஸ்க்கு டிங்கா டிங்கா வைரஸ் என்று பெயர் வைத்துள்ளனர். டிங்கா டிங்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கடும் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். கடும் காய்ச்சலால் பாதிக்கப்படுவது மட்டுமின்றி உடல் நடுக்கத்துடன் காணப்படுகிறார்கள். இந்த டிங்கா டிங்கா வைரஸ் காரணமாக அவர்கள் உடல் நடுங்குவது பார்ப்பதற்கு நடனம் ஆடுவது போல இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வைரஸ் பாதிப்பால் நோயாளிகள் உடல் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லாமல் நடுக்கத்துடனே இருக்கும். இது பார்ப்பதற்கு அவர்கள் நடனம் ஆடுவது போல இருக்கும்.
இந்த டிங்கா டிங்கா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை உகாண்டாவில் 300க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டிங்கா டிங்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது ஏன்? எப்படி? என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை எந்த உயிரழப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஒரு வார காலத்திலே குணம் அடைந்து விடுகின்றனர்.
மக்கள் அச்சம்:
உள்ளுர்வாசிகள் மூலிகை மருந்துகள் மூலமாக குணம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், பரிசோதனை செய்யாமல் அதுபோன்ற மூலிகைகளை பரிந்துரைக்க இயலாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்து 300க்கும் மேற்பட்ட வைரஸ் குப்பிகள் திடீரென மாயமானது. அதில் உயிரை கொள்ளும் ஆபத்தான வைரஸ் மாதிரிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், உகாண்டாவில் வினோதமான டிங்கா டிங்கா வைரஸ் பரவி இருப்பது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
1518ம் ஆண்டு இதே போல மக்களை நடுக்கத்தில் வைத்திருந்த மர்ம நோய் பிரான்ஸ் நாட்டில் பரவியது. இந்த நோயை டான்சிங் பிளேக் என்று குறிப்பிட்டனர், இந்த நோயால் அப்போது ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். டிங்கா டிங்கா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பும் கண்காணித்து வருகிறது.