உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது ரஷியா இன்று குண்டு மழை பொழிந்தது. இதில் சிக்கி அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.


குறிப்பாக, உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, ரஷியா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவிலிருந்து அந்நாட்டை சாலை வழியாகவும் ரயில் மார்க்கமாகவும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன.






இந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாகவே உக்ரைனில் உள்ள நகரங்களில் குண்டு மழை பொழியப்படுவதாக கருதப்படுகிறது. 


உக்ரைன் மீது குறைந்தபட்சம் 75 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறிப்பாக, தலைநகர் கீவ் மற்றும் தெற்கு மற்றும் மேற்க நகரங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் உக்ரைன் நாட்டின் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். போரின் ஆரம்ப வாரங்களில் தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியை ரஷியா கைவிட்ட பிறகு, தலைநகரின் மீதான மிகத் தீவிரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.


இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரானிய ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலைதளத்தில் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஷியா தாக்குதல் குறித்து விரிவாக பேசியுள்ள அவர், "இன்று காலை கடினமானதுதான். நாங்கள் தீவிரவாதிகளை சமாளித்து வருகிறோம். டஜன் கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஈரானிய ட்ரோன்களை எதிர்கொண்டு வருகிறோம்.


அவர்களுக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. முதலாவது, நாடு முழுவதும் உள்ள எரிசக்தி வசதிகள். இரண்டாவது மக்கள். மக்களிடையே மிகப்பெரிய அளவில் உயிர் இழப்பை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக நேரம் பார்த்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் குறிவைக்கப்பட்டுள்ளன" என்றார்.






தாக்குதலை விவரித்துள்ள எல்விவ் மேயர் ஆன்ட்ரி சடோவி, "எரிசக்தி வசதிகள் உட்பட முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து குண்டுவீசப்பட்டுள்ள நிலையில், மேற்கு உக்ரைனில் உள்ள எல்விவ் நகரில் மின்சாரம் தடைபட்டுள்ளது. சூடான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.


தாக்குதல் காரணமாக கிவ் நகரின் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் சாலை சந்திப்பில் மிக பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. கார்கள் அழிக்கப்பட்டன. கட்டிடங்கள் சேதமடைந்தன. அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.