உக்ரைன் பெண்களை ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்ய வீரர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
உக்ரைன் நகரங்களில் ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இன்று தெரிவித்தார். ஆனால், குலேபா இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Watch video: ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் : உக்ரைன் தகவல்
“உக்ரேனிய நகரங்களில் ரஷ்ய வீரர்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும்போது, சர்வதேச சட்டத்தின் செயல்திறனைப் பற்றி பேசுவது நிச்சயமாக கடினம். ஆனால் இறுதியில் இந்த போரை சாத்தியப்படுத்தியவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதிசெய்யும் நாகரிகத்தின் ஒரே கருவி இதுதான்” என்று லண்டனில் உள்ள சாதம் ஹவுஸில் நடந்த ஒரு நிகழ்வில் குலேபா கூறினார்.
கடந்த 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. "சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பைத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போரில் உக்ரைன் நாட்டின் பொதுமக்களும், துப்பாக்கிகளை ஏந்தி ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கெர்சன், கார்கெவ் உள்ளிட்ட நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், போருக்குப் பிறகு உக்ரைனை மீண்டும் புதுப்பிக்க உள்ளதாக, அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்யாவே, அதற்கான நஷ்ட ஈட்டை திரும்ப கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்