கடந்த 24-ம் தேதி முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. "சிறப்பு இராணுவ நடவடிக்கைகள்" என்ற போர்வையின் கீழ், உக்ரைன் மீது ரஷ்யா இந்த படையெடுப்பைத் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு செயலிழந்தபோதிலும், ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போரில் உக்ரைன் நாட்டின் பொதுமக்களும், துப்பாக்கிகளை ஏந்தி ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கெர்சன், கார்கெவ் உள்ளிட்ட நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், போருக்குப் பிறகு உக்ரைனை மீண்டும் புதுப்பிக்க உள்ளதாக, அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்யாவே, அதற்கான நஷ்ட ஈட்டை திரும்ப கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவ் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் முனைப்பு காட்டி வருகிறது. இதை தடுக்கும் முயற்சியில் உக்ரைன் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில ரஷ்ய வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், கீவ் நகர் அருகே ரஷ்ய பாதுகாப்பு படை வீரர் தனது ஆயுதங்களை கைவிட்டு உக்ரைனிடம் சரணடைந்தார். அப்போது உக்ரைன் மக்கள், சரணடைந்த ரஷிய வீரருக்கு டீ, உணவு கொடுத்து கனிவாக நடந்துகொண்டனர். அருகில் இருந்த உக்ரைன் பெண், தனது செல்போனில் ரஷ்ய வீரரின் அம்மா செல்போன் எண்ணை பெற்று அவருக்கு போன் செய்தார். அவரது தாயார் பேசத்தொடங்கியதும் போனை ரஷ்ய வீரரிடம் அப்பெண் கொடுத்தார்.
தனது அம்மாவிடம் பேச ஆரம்பித்ததும், ரஷ்ய வீரர் கண்ணீர் விட்டு அழுதார். தங்கள் நாட்டை ரஷ்ய ராணுவம் தாக்கி வரும் நிலையில், சரணடைந்த ரஷ்ய வீரருக்கு உணவு கொடுத்து கவணித்துக்கொண்ட உக்ரைன் மக்களின் செயல் பலரது பாரட்டையும் பெற்று வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது என்றும், அப்பாவிப் பொதுமக்களை கொன்று வருவதாகவும் ரஷ்ய ராணுவ வீரர்கள் பேட்டியளிக்கும் வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் கதறி அழுத வண்ணம் வாக்குமூலம் கொடுத்து வருகின்றனர்.
அதில், அமைதியாக வாழும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், தாங்கள் பீரங்கிகளுக்கு தீவனமாக மாறி விட்டதாகவும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய ராணுவத்தினர் தங்கள் சக வீரர்களின் சடலங்களைக் கூட எடுப்பதில்லை என்றும், இறுதிச் சடங்கு செய்வது கூட இல்லை என்று பிடிபட்ட ரஷ்ய வீரர்கள் ஆதங்கப்பட்டனர்.