ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து இதுவரை 1 கோடி பேர் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான உக்ரைன், ரஷ்யாவுடன் கிழக்கேயும், வட-கிழக்கேயும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு, உக்ரைனை மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்கு உக்ரைன் எனப் பிரிக்கிறது. 4.5 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாடு இது.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. 27 நாட்களாக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்திவர அதை தாக்குப்பிடித்து தலைநகர் கீவை கைக்குள் வைத்துள்ளது உக்ரைன்.
ஆனால், உக்ரைன் இதற்காக மிகப்பெரிய விலையைக் கொடுத்து வருகிறது. அதே போல் ரஷ்யாவும் உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டு வருகிறது. பொருளாதாரத் தடைகள், வான்வழிப் பரப்பை பயன்படுத்த தடை, எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் என ரஷ்யா அடுக்கடுக்கான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து இதுவரை 1 கோடி பேர் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நா. அகதிகள் உயர்நிலை ஆணையத்தின் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி இது குறித்து, "உலகில் பல பகுதிகளிலும் போர், உள்நாட்டுக் கிளர்ச்சி என நடைபெறுகின்றன. ஆனால் அதுபோல் ஒவ்வொரு முறையும் நடைபெறும்போது பாதிப்பு என்னவோ அப்பாவி பொதுமக்களுக்குத் தான் ஏற்படுகிறது. பல லட்சம் மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து புலம் பெயரும் சூழல் உருவாகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து அதிகபட்சமாக கடந்த வாரம் மட்டும் 3,389,044 பேர் உக்ரைனிலிருந்து வெளியேறினர். உக்ரைனிலிருந்து வெளியேறியவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். 18 வயதிலிருந்து 60 வயதுடைய உக்ரைன் ஆடவர் ராணுவத்தில் இணைந்து சேவை செய்ய வேண்டும் என்ற அரசு உத்தரவு உள்ளதால் உள்நாட்டிலேயே தங்கிவிட்டனர். இது வரை வெளியேறிய மக்களில் 15 லட்சம் பேர் குழந்தைகள். அவர்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகலாம். உக்ரைனின் எல்லையில் லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். இன்னும் 40 லட்சம் பேராவது உக்ரைனில் இருந்து வெளியேற வாய்ப்பிருக்கிறது" என்றார்.
உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவி என தொடர்ந்து வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு புதிதாக ஜாவ்லின், ஸ்டிங்கர் ஏவுகணைகள் அனுப்பவிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ தளவாடங்களைக் கொடுத்தாலும் நேரடியாக வீரர்களை அனுப்பி போரில் ஈடுபடப் போவதில்லை. அப்படிச் செய்தால் அது ரஷ்யாவுக்கு எதிரான நேரடி போராகிவிடும் என்று கூறி வருகின்றன.