ரஷ்யா- உக்ரைன் போர் சூழலை அடுத்து, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றில் ரஷ்ய படைகள் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களில் அவ்வப்போது தொடர்ந்து குண்டுகள் விழும் சத்தமும் கேட்டு வருகிறது. பல இடங்களில் சேதமும் ஏற்பட்டுள்ளது.
அங்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் பெருமளவில் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஏர் இந்தியா விமானங்களை அனுப்பி, இந்திய மாணவர்களை மீட்க முயற்சி செய்து வருகிறது. அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் போலந்து மற்றும் ரூமேனியா உள்ளிட்ட நாடுகள் மூலமாக இந்தியா மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் உக்ரைன் உடன் ரஷ்ய அதிகாரிகள் பெலாரெஸில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் சூழலை அடுத்து, பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. ஏற்கெனவே இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ஆகிய இருவரிடம் தொலைபேசியில் பேசி இருந்தார்.
ரஷ்யா, நோட்டோ படையினர் இடையிலான பிரச்சினைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே சாத்தியப்படுத்த முடியும் எனப் பிரதமர் மோடி கூறியதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
உக்ரைனிடம் பேசியது குறித்து இந்தியப் பிரதமர் அலுவலகம் தரப்பில், பிரதமர் மோடியிடம் ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் போர் சூழல் குறித்து விளக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள போர் சூழல் காரணமாக அங்கு ஏற்பட்டிருக்கும் உயிர்ப் பலி, பொருள் சேதம் குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்