ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததை அடுத்து, ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் சர்வதேச பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் ஸ்விஃப்ட் (SWIFT) எனப்படும் சர்வதேச வங்கி தகவல் பரிமாற்ற முறையை மேற்கொள்ள ரஷ்ய வங்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, அந்நாட்டுக்குப் பெருத்த அடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 


ரஷ்யப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு எப்படி ஸ்விஃப்ட் காரணமாக இருக்கும் என்று அறிந்துகொள்வது ஸ்விஃப்ட் (SWIFT) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. 


ஸ்விஃப்ட் என்றால் என்ன?


உலகளாவிய அளவில் சர்வதேச வங்கிகளுக்கு இடையே நடைபெறும் பணப் பரிமாற்றத்துக்கான தொலைத்தொடர்பு சேவையே ஸ்விஃப்ட் Society for Worldwide Interbank Financial Telecommunication ஆகும். இந்த அமைப்பு, உலகம் முழுவதும் உள்ள வங்கிகள் மிகப்பெரிய அளவிலான பணப் பரிமாற்றத்தைப் பாதுகாப்பாக மேற்கொள்ள உதவுகிறது. எனினும் இது வங்கியோ, பணம் வழங்கும் அமைப்போ கிடையாது. இது எல்லைகளுக்கு இடையிலான பணப்பரிமாற்றத்துக்கு உதவும் குறுஞ்செய்தி சேவை. 




ஸ்விஃப்ட் முறையில் பணம் செலுத்தும் வழிமுறைக்கான வங்கிகள் அல்லது நிறுவனங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்கள் மிகவும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் நடைபெறும். இதை அத்தனை எளிதில் ஹேக்கிங் செய்துவிட முடியாது. 


எப்படிச் செயல்படும்?


இதன்படி ஒவ்வொரு அமைப்புக்கும் 8 முதல் 11 எழுத்துகளைக்கொண்ட தனிக் குறியீட்டு எண் வழங்கப்படும். அந்த எண்ணை அனுப்புனரும் பெறுநரும் சரிபார்த்தால் மட்டுமே, பரிவர்த்தனை வெற்றிகரமாக நடக்கும். வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்ற விவரங்கள் மட்டுமே இதில் இருக்கும். எண் சரிசார்க்கப்பட்ட பிறகு, மிகப்பெரிய சர்வதேச பரிவர்த்தனையைப் பாதுகாப்புடன் செய்ய முடியும். இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் அமைப்பு வரை நாடுகளின் முக்கிய வங்கிகள் ஸ்விஃப்ட் அமைப்பையே பயன்படுத்தி வருகின்றன.


இதனால், ஸ்விஃப்ட் அமைப்பை உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன. 




ஸ்விஃப்ட் எப்படி இயங்குகிறது?


1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பெல்ஜியம், ப்ரஸல்ஸைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ஸ்விஃப்ட் முறையில் நாள்தோறும் சுமார் 3.2 கோடி குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அதாவது ஆண்டுக்கு 1,168 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


ஸ்விஃப்ட் அமைப்புக்கு எதிராக சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச வங்கி பணப் பரிமாற்ற சேவையை வழங்கி வருகின்றன. சீனா, சிஐபிஎஸ் (CIPS) என்ற முறையையும், இந்தியா எஸ்எஃப்எம்எஸ் (SFMS) முறையையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதேபோல ரஷ்யாவும் எஸ்பிஎஃப்எஸ் (SPFS) என்ற வங்கி பரிமாற்ற சேவை அமைப்பை வைத்துள்ளது. முன்னதாக 2014-ல் ரஷ்யா, உக்ரைனின் க்ரீமியா தீபகற்பத்தைக் கைப்பற்றியபோதும் ஸ்விஃப்ட் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. அதையடுத்து அந்த ஆண்டே, எஸ்பிஎஃப்எஸ் முறையை ரஷ்யா உருவாக்கியது. எனினும் இதில் பெரும்பாலும் ரஷ்ய வங்கிகளே உள்ளன. 


பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, யுனைடெட் கிங்டம், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய ஜி10 நாடுகளே ஸ்விஃப்ட் அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன. இவற்றுடன் ஐரோப்பிய மத்திய வங்கியும், பெல்ஜியம் மத்திய வங்கியும் இதைக் கண்காணிக்கின்றன. சுமார் 3,500 நிறுவனங்களில் இருந்து பங்குதாரர்கள் இதில் உள்ளனர். இவர்கள் 25 தன்னிச்சையான இயக்குநர்கள் அடங்கிய வாரியத்தைத் தேர்ந்தெடுப்பர்.




ரஷ்யாவுக்கு என்ன பாதிப்பு?


ரஷ்யப் பணப் பரிமாற்றத்தில் சுமார் பாதிக்கும் மேற்பட்டவை, ஸ்விஃப்ட் முறையில்தான் நடக்கின்றன. உலக நாடுகள் அனைத்துமே ஸ்விஃப்ட் அமைப்பின்மூலம் செயல்படுவதால், ரஷ்யா மீது விதித்துள்ள தடையால் அந்நாட்டால் பிற நாடுகளுடன் பணப்பரிவர்த்தனை செய்வது கடினமாகும். நட்பு நாடானா சீனாவுடன் கூட பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியாது. 


பிற நாடுகளிடம் இருந்து பணத்தைப் பெற முடியாது என்பதால், ரஷ்யாவால் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. இதனால் பாதுகாப்புத்துறை, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, வாகனத் துறை சார்ந்தும் ரஷ்யா பெருத்த அடி வாங்கும். அதன் ஒட்டுமொத்த உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.


முன்னதாக ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் மீது ஸ்விஃப்ட் முறையைப் பயன்படுத்துவதில் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு ஈரான் அணுஆயுதச் சோதனையை மேற்கொண்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கும் மேற்பட்ட எண்ணெய் ஏற்றுமதி லாபத்தை அந்நாடு இழந்தது. இந்த சூழலில், தன்னுடைய சொந்த வங்கி சேவை அமைப்பான எஸ்பிஎஃப்எஸ்-ஐ ரஷ்யா தீவிரமாக வலுப்படுத்தத் தொடங்கி உள்ளது.