கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா படையெடுக்க தொடங்கியது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக போர் தொடர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் இந்த போரில், ரஷியா பல சவால்களை சந்தித்துள்ளது. பல சவால்களுக்கு மத்தியிலும், உக்ரைனில் பல முக்கிய இடங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது.


"புதினை படுகொலை செய்துவிடுவார்கள்"


இந்த நிலையில், உக்ரைனில் இருந்து ரஷிய அதிபர் புதின் பின்வாங்கினால் அவரை படுகொலை செய்துவிடுவார்கள் என உலகின் டாப் 2 பணக்காரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க குடியரசு கட்சி செனட் உறுப்பினர்கள் உடனான கலந்துரையாடலின்போது, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இப்படி தெரிவித்துள்ளார்.


ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை வழங்கும் நோக்கில் அமெரிக்க செனட் சபையில் மசோதா கொண்டு வரப்பட்டது. உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர்களும் இஸ்ரேல், தைவான், காசாவுக்கு 35 பில்லியன் டாலர்களும் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க குடியரசு கட்சி செனட் உறுப்பினர்கள், எக்ஸ் தளத்தில் நடந்த ஸ்பெஸஸ் கலந்துரையாடலில் பங்கேற்றனர். விஸ்கான்சின் செனட் உறுப்பினர் ரான் ஜான்சன், ஓஹியோ செனட் உறுப்பினர் ஜேடி வான்ஸ், உட்டா செனட் உறுப்பினர் மைக் லீ,  குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் விவேக் ராமசுவாமி, கிராஃப்ட் வென்ச்சர்ஸ் எல்எல்சியின் இணை நிறுவனர் டேவிட் சாக்ஸ் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்று பேசினர்.


பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்:


அப்போது, உக்ரைன் வெற்றியை எதிர்பார்ப்பவர்கள் கற்பனை உலகில் வாழ்கின்றனர் என ஜான்சன் தெரிவித்தார். இந்த கருத்தை ஒப்புக்கொண்ட எலான் மஸ்க், "உக்ரைனுக்கு ஏதிரான போரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தோற்பதற்கு வாய்ப்பே இல்லை. உக்ரைன் மசோதா பற்றி தெரிந்து கொள்ள அமெரிக்கர்கள் தங்களின் மக்கள் பிரதிநிதிகளை தொடர்புகொள்வார்கள் என நம்புகிறேன். 


இந்தச் செலவு உக்ரைனுக்கு உதவாது. போரை நீட்டிக்க உக்ரைனுக்கு உதவாது. போரில் வெல்ல உக்ரைனுக்கு திறன் இருக்கிறதா என தெரியவில்லை. சண்டையை முடிவுக்கு கொண்டுவர புதினுக்கு அழுத்தம் தரப்படுகிறது. அவர் போரில் இருந்து பின்வாங்கினால், அவர் படுகொலை செய்யப்படுவார்.


சில சமயங்களில் புதினின் ஆதரவாளர் என விமர்சிக்கப்படுகிறேன். ஆனால், அந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது. போரில் ரஷியாவை மட்டுப்படுத்த மற்றவற்றை காட்டிலும் எனது நிறுவனங்கள் நிறையவற்றை செய்துள்ளது" என்றார். எலான் மஸ்கின் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனம் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைக்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்கி வருகிறது. 


போரை தொடர்ந்து, உக்ரைனின் தொலைத்தொடர்பில் எலான் மஸ்கின் ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனம் பெரும் பங்காற்றி வருகிறது. இருப்பினும், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நிதி உதவி வழங்க எலான் மக்ஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.