Gold Mine Landslide: தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு.. உயிருடன் புதைந்த 9 தொழிலாளர்கள்: தற்போது நிலை என்ன?

துருக்கியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் சிக்கியுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Continues below advertisement

துருக்கியின் எர்சின்கான் மாகாணத்தில் இலிக் நகரத்தில் கோப்லர் என்ற தங்கச்சுரங்கம் இயங்கி வருகிறது. நேற்று மதியம் 2.30 மணிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டதில் சுரங்கத்தை சுற்றியுள்ள மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலச்சரிவு ஏற்படும் காட்சிகளை அப்பகுதிக்கு அருகில் இருந்த தொழிலாளர் ஒருவர் படம்பிடித்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட போது 9 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் 9 பேரும் நிலச்சரிவில் புதைந்ததாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சுமார் 400 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சுரங்கப் பொறியாளர்களின் அறையின் தலைவர் அய்ஹான் யுக்செல் இந்த சம்பவம் தொடர்பாக பேசுகையில், நிலச்சரிவைத் தொடர்ந்து சுரங்கத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சயனைட் சுற்றியுள்ள பகுதியை மாசுபடுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார். புவியியலாளர் சுலைமான் பாம்பலும் இதனையே தெரிவித்துள்ளார். அருகிலுள்ள யூப்ரடீஸ் நதிக்கு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி யூப்ரடீஸ் நதியில் சையனைடு கலந்து விட்டால் அது அனைத்து உயிரினங்களுக்கு பேராபத்தாக முடியும் எனறும் இதனை உடனடியாக தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  

இதனை தொடர்ந்து, நீர் மாசுபடுவதைத் தடுக்க யூப்ரடீஸ் நதிக்கு செல்லும் நீரோடை தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. துருக்கி, சிரியா மற்றும் ஈராக் வழியாக யூப்ரடீஸ் நதியில் சயனைடு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 2020 இல் இந்த சுரங்கம் மூடப்பட்டது. பின் இந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

துருக்கியில் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டில், கருங்கடல் கடற்கரையில் உள்ள அமாஸ்ரா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 41 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதேபோல் 2014 ஆன் ஆண்டு, மேற்கு துருக்கியின் சோமாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நடந்த விபத்தில், 301 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.    

 

 

 

Continues below advertisement