அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் புபோனிக் பிளேக் என்ற அரிய நோயால் (Rare Case Of Bubonic Plague) பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2015 ஆம் ஆண்டு இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வளர்ப்பு பூனை மூலம் இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் கருப்பு மரணம் (Black Death) என்று அழைக்கப்படும் பிளேக் நோய் பரவியது. மனித வரலாற்றில் மிகக் கொடிய தொற்று நோய்களில் ஒன்றான புபோனிக் பிளேகால் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புபோனிக் பிளேக் என்பது பாலூட்டிகளை பாதிக்கக்கூடிய ஒரு தொற்று நோயாகும். பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோயை ப்ளேக் என்று அழைக்கப்படுகிறது. யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியா மூலம் ப்ளேக் தொற்று நோய் உருவாகிறது. இந்த வகை பாக்டீரியா விலங்குகளில் வாழும். குறிப்பாக அணில் போல காட்சியளிக்கும் ரோடண்ட் என்ற வகை விலங்குகளிலும், அதன் உடலில் உள்ள உண்ணிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படுகிறது. இது மனிதர்களுக்கு எளிதாக பரவக்கூடியது. குறிப்பாக புபோனிக் பிளேக் என்பது பொதுவாக பரவக்கூடிய நோய்களில் ஒன்றாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்கள், விரல்கள் போன்ற உடல் பாகங்கள் கருப்பாக மாறிவிடும் என்பதால், இதனை `தி பிளாக் டெத்` என அழைக்கப்படுகிறது.
காய்ச்சல், குமட்டல், பலவீனம், குளிர் மற்றும் தசை வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என்றும் கூறப்படுகிறது. புபோனிக் பிளேகை பொறுத்தவரை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நுரையீரலை பாதிக்கும் நிமோனிக் பிளேக் அல்லது ரத்த ஓட்டத்தில் தொற்றை உண்டாக்கும் செப்டிசிமிக் பிளேக் ஆகியவையை உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.