2018-ல் இருந்து பல்வேறு காரணங்கள் மற்றும் விபத்துகளால் குறைந்தபட்சம் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 34 வெளிநாடுகளில் கனடாவில்தான் அதிக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


இந்தத் தகவலை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் அளித்துள்ளார். இந்திய மாணவர்களின் மரணம் குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:


’’2018ஆம் ஆண்டில் இருந்து வெளிநாடுகளுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்களில் 403 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில், கனடாவில் இருந்து 91 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இங்கிலாந்தில் 48 பேரும் ரஷ்யாவில் 40 மாணவர்களும் இறந்துள்ளனர். பல்வேறு காரணங்கள் மற்றும் விபத்துகளால் இவர்கள் மரணித்துள்ளனர்.


நாடு வாரியாகப் புள்ளிவிவரம்


அதேபோல அமெரிக்காவில் 36 பேரும் ஆஸ்திரேலியாவில் 35 மாணவர்களும் உக்ரைனில் 21 மாணவர்களும் மரணத்தைத் தழுவி உள்ளனர்.


தொடர்ந்து ஜெர்மனியில் 20 மாணவர்களும் சிப்ரஸில் 14 மாணவர்களும் இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.


இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்வதை, இந்திய அரசு முக்கியமான ஒன்றாகக் கருதுகிறது.


குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்


எதிர்பாராத விதமாக ஏதேனும் சம்பவம் நடந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பிட்ட சம்பவம் முறையாக விசாரிக்கப்படுவதையும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதிசெய்யவும் சம்பந்தப்பட்ட நாட்டு அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.


பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு விரிவான தூதரக உதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக அவசர கால மருத்துவ உதவி, தங்கும் வசதி ஆகியவையும் அளிக்கப்படுகின்றன’’.


இவ்வாறு சம்பந்தப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிக மரணத்துக்கு என்ன காரணம்?


இந்திய மாணவர்களின் அதிக அளவிலான இறப்பு குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறும்போது, ’’அதிக அளவிலான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கின்றனர்.


 அதேபோல தனிப்பட்ட விரோதம் உள்ளிட்ட பல சம்பவங்களாலும் மரணங்கள் நடைபெற்று உள்ளன. இது மத்திய அரசிடம் எடுத்துச்சொல்லத் தகுதியான பிரச்சினையா என்று தெரியவில்லை.


மத்திய அரசின் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பங்களைச் சந்தித்துப் பேசுகின்றன. இதுபோன்ற வழக்குகளை உள்ளூர் அதிகாரிகளிடமும் எடுத்துக்கொள்கிறோம்" என்று பக்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)