மத்திய கிழக்கில் அமைந்துள்ள லெபனான் நாட்டின் தெற்கு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஹெஸ்புல்லா இயக்கம். கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசியல் இயக்கம் ஈரான் நாட்டின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. இந்த இயக்கத்திற்கு முக்கிய ஆதரவாக இருந்து வருவது ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் ஆவர்.


இஸ்ரேலுக்கு பரம எதிரியாக உள்ள ஹெஸ்புல்லா இயக்கம்:


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலின் முக்கிய எதிரியாக இருப்பது ஹெஸ்புல்லா இயக்கம்தான். ஹெஸ்புல்லா இயக்கத்திற்கு, ஆண்டுக்கு லட்சக்கணக்கான டாலர்களை ஈரான் வழங்கி வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வருகிறது.


இச்சூழலில், ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையேயான போரில் ஹமாஸ் அமைப்பினருடன் கைகோர்க்க தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா இயக்கம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இது உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.


இந்த நிலையில், ஹெஸ்புல்லா இயக்கத்துக்கு இஸ்ரேல் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடங்கினால், 
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் தெற்கு லெபனானிலும் பேரழிவை ஏற்படுத்திவிடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.


"பெய்ரூட்ட நாசம் ஆக்கிருவோம்"


இதுகுறித்து அவர் கூறுகையில், "போரைத் தொடங்க ஹெஸ்புல்லா முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனானை காசா, கான் யூனிஸ்களாக மாற்றிவிடுவோம். அது இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை" என்றார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் வடக்கு கமாண்ட் தலைமையகத்துக்கு சென்ற நெதன்யாகு, இந்த பகிரங்க எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.


கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, லெபனான் உடனான எல்லையில் ஹெஸ்புல்லா இயக்குத்துக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கும் இடையே மோதல் வெடித்தது. 


ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வடக்கு காசாவை நிலைகுலைய வைத்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17,177 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் பெண்களுமே ஆவர்.


சர்வதேச அழுத்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, ஏழு நாள்கள் தொடர்ந்தது. தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பிலும் பிடிக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் பிடித்த வைத்த பணயக்கைதிகளும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தெற்கு காசா மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது இஸ்ரேல். அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது.