பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட நிபுணர் ஆராய்ச்சி குழுதான் ரஷியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வால்டா டிஸ்கஷன் கிளப். இதன் ஆண்டு விழாவில் பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார்.


இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பாராட்டி பேசிய அவர், "மோடியின் தலைமையில் இந்தியாவில் நிறைய செய்யப்பட்டுள்ளது. அவர் ஒரு தேசபக்தர். 'மேக் இன் இந்தியா' என்ற அவரது யோசனை பொருளாதார ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் முக்கியமானது. எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம். அது உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்பதில் பெருமை கொள்ளலாம்.


பிரிட்டன் காலனியாக இருந்து தற்போது நவீன நாடாக வளர்ந்துள்ள இந்தியாவின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. சுமார் 1.5 பில்லியன் மக்கள் மற்றும் திட்டவட்டமான வளர்ச்சி முடிவுகள் இந்தியா மீதான அனைவரின் மரியாதைக்கும் அபிமானத்திற்கும் காரணங்களைத் தருகின்றன" என்றார்.


 






இந்திய, ரஷிய உறவின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், "இது பல ஆண்டுகளாக நெருங்கிய நட்பு உறவுகளால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒருபோதும் கடினமான பிரச்னைகளை எதிர்கொண்டதில்லை. ஒருவருக்கொருவர் ஆதரவளித்தோம். அது இப்போதும் நடக்கிறது. எதிர்காலத்திலும் அது நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.


இந்திய விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உரத்தின் விநியோகத்தை அதிகரிக்க சொல்லி பிரதமர் மோடி கேட்டு கொண்டதாக கூறிய புதின், "அளவை 7.6 மடங்கு அதிகரித்துள்ளோம். விவசாயத்தில் வர்த்தகம் கிட்டத்தட்ட இருமடங்காகிவிட்டது" என்றார்.


கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீது தொடுக்கப்பட்ட ரஷிய போர் கடந்த மாதங்களாக நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடியை ரஷிய அதிபர் புதின் பாராட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


சமீபத்தில், உக்ரைனில் உள்ள நான்கு பகுதிகளை ரஷியா இணைத்து கொண்டது. இதை கண்டிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 உறுப்பினர்களும் எதிராக 5 பேர் வாக்களித்தனர். 


இந்தியா உள்பட 35 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதேபோன்ற தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிராகரித்திருந்தது. இந்த தீர்மானத்தையும் இந்தியா புறக்கணித்திருந்தது. சொல்ல போனால், ரஷியாவை கண்டிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களை இந்திய புறக்கணித்திருந்தது.