கடந்த ஒரு ஆண்டு காலமாக ரஷியா, உக்ரைன்  ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.


முக்கியத்துவம் வாய்ந்த பைடன் பயணம்:


உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக, அமெரிக்க அதிபர் அங்கு சென்றிருப்பது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக கருதப்பட்டது. கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, ரஷிய படையெடுப்பின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு பைடன் அங்கு சென்றிருந்தார்.


இந்நிலையில், உக்ரைனுக்கு பைடன் சென்றிருந்தபோது, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷியா சோதனை செய்ததாகவும் ஆனால், அது தோல்வியில் முடிந்ததாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா ஏவுகணை சோதனை தொடர்பாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.


உச்சக்கட்ட பரபரப்பு:


இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக அமெரிக்காவிடம் ரஷியா முன்கூட்டியே தெரிவித்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்த தகவல் அந்த செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனை அமெரிக்காவிற்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் இது பதற்றமான நிகழ்வு அல்ல என்றும் ஒரு அதிகாரி கூறியுள்ளார்.


SARMAT என்ற ஏவுகணையே பைடனின் பயணத்தின்போது சோதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஏவுகணை சாத்தான் II என்று மேற்குலக நாடுகள் குறிப்பிடுகின்றன. இது பல அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் கொண்டது.


இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருந்தால், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று நடைபெற்ற ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில் அதை முன்னிலைப்படுத்தியிருப்பார்.


இருப்பினும், பைடன் உக்ரைனை அடைவதற்கு சற்று நேரம் முன்பு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகளில் ஒருவர் தெளிவுபடுத்தினார். ஏவுகணை சோதனை குறித்து கருத்து தெரிவிக்க ரஷியா மறுத்துவிட்டது.


உண்மையில், பைடனின் பயண திட்டத்தின்படி, அவர் போலாந்துக்கு செல்லவிருந்தார். ஆனால், அவர் திடீரென உக்ரைன் தலைநகருக்கு சென்றார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் கீவ் நகரில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியது.


உக்ரைனுக்கு ஆதரவு அளித்த பைடன்:


உக்ரைன் பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பைடன், "உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான எனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக கீவ் சென்றுள்ளேன்" என குறிப்பிட்டார்.


பைடனின் திடீர் பயணத்தை பாராட்டிய செலன்ஸ்கி, "ஜோசப் பைடன் கீவ்வுக்கு வருக! உங்கள் வருகை அனைத்து உக்ரைனியர்களுக்கும் உங்களின் ஆதரவின் மிக முக்கியமான சமிக்ஞையாகும்" என்றார்.