ரஷ்ய நாட்டின் லூனா 25 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நிலாவின் இறுதிக்கட்ட சுற்றுப் பாதையைக் குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, விழுந்து நொறுங்கியது.


நீர்த்தேக்கம் குறித்து ஆய்வு


நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ தரப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் சந்திரயானுக்கு போட்டியாக லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா ஆகஸ்ட் 11ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. நிலவில் இருக்கும் நீர்த்தேக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக லூனா 25 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.


மாஸ்கோவிற்கு கிழக்கே 3,450 மைல்கள் (5,550 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் 2.1 வி ராக்கெட் லூனா-25 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 


கடந்த 1976 ஆம் ஆண்டு ரஷ்யா, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக  லூனா 24 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதற்கு பின் 47 ஆண்டுகள் கடந்து லூனா 25 ஆய்விற்காக அனுப்பப்பட்டது. லூனா-25, தோராயமாக சிறிய காரின் அளவு இருக்கும், சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருட காலம் வரை செயல்படுவதை நோக்கமாக கொண்டு இருந்தது. 


திடீர் கோளாறு


பயணத்தில் லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதனை தொடர்ந்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  இதனால், இறுதி சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்ப முடியாமல், தற்போதையை பாதையிலேயே லூனா 25 விண்கலம் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டது.


இந்த திடீர் கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தகவல் தெரிவித்தது.  இந்த நிலையில், லூனா விண்கலம், செயல்பட முடியாமல் நிலவில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்தத் தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. 


நொறுங்கிய ரஷ்யாவின் கனவு


ரஷ்யாவின் லூனா 25 ஒரு லேண்டர் மிஷன் மட்டுமே சுமந்து சென்றது, அதில் ரோவர் இல்லை. லூனா 25 லேண்டர் 800 கிலோ எடை கொண்டிருந்தது. இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரமின் எதிர்பார்க்கப்படும் பணிக்காலம் 14 நாட்கள் ஆகும். அதே சமயம் லூனா 25, ஒரு வருட காலம் ஆய்வு செய்யும் என்று கணிக்கப்பட்டது.


இந்தியா அனுப்பியதற்குப் பிறகு லூனா விண்கலத்தை அனுப்பிய ரஷ்யா, சந்திரயானுக்கு முன்பே தென் துருவத்தில் இறங்கும் வகையில் லூனா விண்கலத்தை வடிவமைத்து இருந்தது. எனினும் தரையிறங்கும் முன்பே லூனா வெடித்துச் சிதறி, ரஷ்யாவின் கனவை நொறுக்கிவிட்டது.