இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லூனா 25 விண்கலம் இன்று நிலவில் விழுந்து நொறுங்கியது. இதற்கு என்ன காரணம் என்று விரிவாகப் பார்க்கலாம். 


லூனா 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா ஆகஸ்ட் 11ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. நிலவில் இருக்கும் நீர்த்தேக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக லூனா 25 செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது.


மாஸ்கோவிற்கு கிழக்கே 3,450 மைல்கள் (5,550 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் 2.1 வி ராக்கெட் லூனா-25 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பயணத்தில் லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதனை தொடர்ந்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.


ஆனால் திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அடுத்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்த லூனா 25, தொடர்பை இழந்து நொறுங்கி சிதறியது.


தொடர்புக் கட்டுப்பாட்டை இழந்தது


இதுகுறித்து ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஆகஸ்ட் 21ஆம் தேதி லூனா விண்கலம், நிலவில் தரை இறங்குவதாக இருந்தது.  ஆகஸ்ட் 19ஆம் தேதி மாஸ்கோ நேரப்படி, 14.57க்கு  லூனா 25 தொடர்புக் கட்டுப்பாட்டை இழந்தது. ஆக.19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றது. தொடர்பை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 








திட்டமிட்ட அளவுருக்களில் இருந்து மாறுதல் ஏற்பட்டதை அடுத்து, திட்டமிடப்படாத சுற்றுப்பாதையில் (off-design orbit) நுழைந்தது. இதனால் சந்திரனின் மேற்பரப்பில் மோதி லூனா செயலிழந்தது. இந்தத் தோல்வி குறித்து விரிவாக ஆராய துறைசார் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சாஃப்ட் லேண்டிங்கில் சிக்கல்


நிலாவில் தரை இறங்குவது (soft-landings) எவ்வளவு சவாலானது என்பதை லூனா 25 மற்றும் சந்திரயான் 2 ஆகியவற்றின் தோல்விகள் எடுத்துக் காட்டுகின்றன. நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்வதில் தோல்வி என்பது உலக நாடுகளுக்கு ஒன்றும் புதிதில்லை.  


1976-ல் இருந்து சீனா என்ற ஒற்றை நாடு மட்டுமே நிலவில் சாஃப்ட் லேண்டிங்கை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. Chang’e 3 மற்றும் Chang’e 4 ஆகிய விண்கலங்கள் இதைச் செய்து முடித்துள்ளன. பிற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன. 


லூனா 24 


நிலவின் மேற்பரப்பில் இறங்குவதில் லூனா 25 தனியாளில்லை. முன்னதாக, லூனா வரிசையில் 1960 மற்றும் 70களில் அன்றைய சோவியத் யூனியன் அரசு சார்பில் லூனா விண்கலங்கள் நிலாவுக்கு அனுப்பப்பட்டன. கடைசியாக 1976-ல் லூனா 24 நிலவின் மேற்பரப்புக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல பத்தாண்டுகளாக லூனா விண்கலங்கள் விண்ணுக்கு அனுப்பப்படாத நிலையில், 2023-ல் லூனா 25 விண்கலம் அனுப்பப்பட்டது. 


சந்தியராயன் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் பட்சத்தில் உலகத்திலேயே 4ஆவது நாடாக இந்தியா நிலவி கால் வைக்கும். முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா (சோவியத் யூனியன் அரசு) மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிலவில் இறங்கி உள்ளன. எனினும் நிலவின் தென் துருவத்தில் இறங்கும் முதல் நாடு என்றும் வரலாற்றுப் பெருமையைப் பெறும்.