அமெரிக்காவின் நியூ மெக்சிகோவின் ரூய்டோசோவில், திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஒரு வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், மற்றொரு வீடு அடித்துச்செல்லப்படும் அதிர்ச்சிக் காட்சி பதிவாகியுள்ளது.
அரை மணி நேரத்தில் 20 அடி உயர்ந்த ரூய்டோசோ ஆற்றின் நீர்மட்டம்
நியூ மெக்சிகோவில் உள்ள மலைக் கிராமமான ரூய்டோசோவில், திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த திடீர் வெள்ளத்தால் ரூய்டோசோ ஆற்றின் தண்ணீர், அரை மணி நேரத்தில் சுமார் 20 அடி வரை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் உயர்வான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவசரகால மீட்புக் குழுக்கள், வீடுகள், வாகனங்களில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேத விவரம் குறித்து இதுவரை தகவல் இல்லை
இந்த காட்டாற்று வெள்ளத்தால், இதுவரை உயிரிழப்புகளோ, காயமடைந்தவர்கள் குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. தண்ணீர் வடியும்போதுதான் சேத விவரங்கள் குறித்து தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மீட்புக்குழுக்கள் மற்றும் உள்ளூர் குழுக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக நியூ மெக்சிகோ உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அவசர மேலாண்மைத் துறையைச் சேர்ந்த அதிகாரியான டேனில்லி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த கோடை காலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தைவிட இந்த வருடம் அதிக அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சில்வா தெரிவித்துள்ளார். மேலும், கடந்த முறை தண்ணீர் புகாத இடங்களில் கூட இந்த முறை தண்ணீர் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, வெள்ளநீர் பாயும்போது, அங்குள்ள வீடு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், மற்றொரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சிக் காட்சி இடம்பெற்றுள்ளது.
தேசிய வானிலை சேவை மையம் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் காட்டுத் தீயால் தாவரங்கள் கருகிய நிலையில், அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூய்டோசோ மேயர் அறிவுறுத்தல்
இதனிடையே, வீடுகளுக்குள் இருக்கும் மக்கள் அங்கேயே இருக்குமாறும், வெளியே வர வேண்டாம் என்றும் ரூய்டோசோவின் மேயர் லின் க்ராஃபோர்டு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உயர்வான பகுதிகளில் இருப்பதே தற்போதைய சூழலில் நல்ல டீல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெள்ளத்தில் இதுவரை 3 பேர் மாயமாகியுள்ளதாகவும், காயமடைந்தோர், உயிரிழந்தோர் பற்றி எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.