உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 14 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த பிரச்னை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது. குறிப்பாக, பெரும்பாலான உலக நாடுகள் இரு துருவங்களாக பிரிந்து கிடக்கின்றன.


ரஷிய போர்:


அமெரிக்க, மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளது. பெலாரஸ், நிகரகுவா, வட கொரியா, சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில், இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் பொது சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கூட இந்திய எந்த பக்கமும் எடுக்காமல் தீர்மானத்தை புறக்கணித்தது.


இந்த விவகாரத்தில், ரஷிய அதிபர் புதின் மீது அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வரும் நிலையில்,  அதிர வைக்கும் குற்றச்சாட்டை உக்ரைன் மீது ரஷியா சுமத்தியுள்ளது. ஒரே இரவில் ட்ரோன் தாக்குதல் மூலம் புதினை கொல்ல உக்ரைன் முயற்சித்ததாகவும் ஆனால், அது தோல்வி அடைந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.


ட்ரோன் மூலம் புதினை கொல்ல முயற்சியா?


ரஷிய கோட்டையில் அமைந்துள்ள புதினின்  இல்லத்தின் மீதான தாக்குதலுக்கு இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவை மின்னணு பாதுகாப்பு உபகரணங்களால் செயல் இழக்கப்பட்டது என்றும் ரஷியா தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ரஷியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டு ஆளில்லா வான்வழி வாகனங்கள் ரஷிய கோட்டையை குறிவைத்தன. ரேடார் போர் அமைப்புகளைப் பயன்படுத்தி ராணுவம் மற்றும் சிறப்பு படைகளால் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, அவை செயலிழக்கச் செய்யப்பட்டன.


இந்த நடவடிக்கைகளை திட்டமிட்ட பயங்கரவாதச் செயலாகவும், அதிபரின் உயிரைக் கொல்லும் முயற்சியாகவும் நாங்கள் கருதுகிறோம், வெற்றி தினத்தை முன்னிட்டு, மே 9 அணிவகுப்பு நடத்தப்பட்டதுய இதில் வெளிநாட்டு விருந்தினர்களின் வருகையும் திட்டமிடப்பட்டுள்ளது. பதிலடி நடவடிக்கைகளை எடுக்க ரஷிய தரப்புக்கு உரிமை உள்ளது.


நடந்தது என்ன?


கோட்டை வளாகத்தில் ட்ரோன்களின் துண்டுகள் சிதறிக்கிடந்தன. ஆனால், உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். "நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை" என அவர் கூறியுள்ளார்.


ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் புதின் கோட்டையில் இல்லை. மாஸ்கோவிற்கு வெளியே உள்ள அவரது நோவோ ஓகாரியோவோ இல்லத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷிய சட்ட அமலாக்க அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ள பாசா என்ற டெலிகிராம் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஷிய கோட்டையின் குவிமாடத்தை நோக்கி ஒரு பொருள் பறந்து வருவதும் கோட்டையை அடைவதற்கு முன்பே நடுவானில் அது வெடித்துச் சிதறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை இன்றும் உறுதி செய்யப்படவில்லை.