கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, உக்ரைன் பாதுகாப்புப அமைச்சகம் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த ட்வீட் தற்போது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த ட்விட்டர் பதிவில் மர்லின் மன்றோவின் பிரபல புகைப்படத்தில் இருப்பது போல இந்து கடவுள் காலி இடம்பெற்றுள்ளார்.
இந்து மத கடவுள் குறித்து சர்ச்சை கார்ட்டூன்:
அதுமட்டும் இன்றி, உக்ரைன் மீது ரஷியா நடத்தும் வெடிகுண்டு தாக்குதலை குறிக்கும் விதமாக வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு புகைமூட்டமான பகுதியில் இருந்து இந்து மத கடவுளான காளி தெரிவது போல கார்ட்டூன் வடிவமைக்கப்பட்டிருந்தது. "கலை வேலைப்பாடு" என்ற கேப்சனுடன் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த கார்ட்டூனுக்கு எதிராக பெரும் எதிர்ப்பு எழுந்து, நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியதை அடுத்து அமைச்சகம் அந்த பதிவை நீக்கியது. பதிவை நீக்கிய பிறகும், கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உக்ரைன் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த உக்ரைன் வெளியுறவுத்துறை இணையமைச்சர் எமின் தபரோவா, நேற்று இந்த விவகாரத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்தார். மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், "உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்து தெய்வமான காளியை தவறாக சித்தரித்ததற்கு வருந்துகிறோம்.
உக்ரைன் விளக்கம்:
உக்ரைன் மற்றும் அதன் மக்கள் தனித்துவமான இந்திய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். (இந்தியாவின்) ஆதரவை மிகவும் பாராட்டுகிறார்கள். சித்தரிக்கப்பட்ட அந்த ஏற்கனவே அகற்றப்பட்டது. பரஸ்பர மரியாதை மற்றும் நட்பின் உணர்வில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க உக்ரைன் உறுதியாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பதிவை ட்விட்டரில் பகிர்ந்த இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா, "சமீபத்தில் உக்ரைன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டெல்லியில் இருந்தபோது, உக்ரைன் அரசாங்கத்தின் உண்மையான முகத்தை பின்வைத்துவிட்டு இந்தியாவிடம் இருந்து ஆதரவைக் கோரினார்.
பிரச்சார போஸ்டர் ஒன்றில் இந்திய கடவுள் காளி கேலிச்சித்திரமாக வடிவமைக்கப்பட்டார். இது உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிரான தாக்குதல்" என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்துக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ரஷியா:
எந்த ஒரு வெளிநாட்டு அரசாங்கமும் அல்லது நாடும் செய்யாத வகையில் காளி தேவியை உக்ரைன் கேலி செய்ததாகவும் உக்ரைன் அமைச்சகத்தின் நடவடிக்கைகள் வெறுக்கத்தக்க வெறுப்பு பேச்சு என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த விவகாரத்தில், இந்திய வெளியவுறத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலையிட வேண்டும் என சிலர் வலியுறுத்தியிருந்தனர்.
இந்து கடவுள் காலி அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விவகாரத்தில் உக்ரைனை கடுமையாக சாடிய ரஷியா, அனைத்து நம்பிக்கைகளையும் உக்ரைன் அவமதித்து வருவதாக விமர்சித்திருந்தது.