நாட்டின் தலைமை பதவியை வகிக்கும் அதிபர்கள், பிரதமர்களுக்கு அந்தந்த நாடுகளில் உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். வேறு நாடுகளுக்கு அவர்கள் செல்லும்போது எந்த நாட்டுக்கு அவர்கள் செல்கிறார்களோ அந்த நாட்டின் தலைமை பதவியில் இருப்பவர்கள் அவர்களை வரவேற்பார்கள்.
வெளிநாட்டு தலைவர்களின் வருகையிலிருந்து, நகரம் முழுவதும் பயணம் செய்வது வரை அவர்களுக்கு வழிநெடுகிலும் பலத்த உயர் மட்ட பாதுகாப்பு வழங்கப்படும். பாதுகாப்பின் அனைத்து அம்சங்களையும் நல்ல பயிற்சி பெற்ற பாதுகாப்பு படை வீரர்கள் கவனத்தில் எடுத்து கொண்டு நடைமுறைபடுத்துவர்.
நிலைமை இப்படியிருக்க, ஆர்பிஜி குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட சூழலில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசி கொள்கின்றனர்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் ஆகியோர் சந்தித்து கொள்ளும் வீடியோவே அது. கடந்த 2018ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளில், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டிருந்தார் மேக்ரான்.
அப்போதுதான், இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த பழைய வீடியோவை ட்விட்டரில் தற்போது பகிர்ந்துள்ள ஹர்ஷ் கோயங்கா, "பிரான்ஸ் அதிபர் மேக்ரானை டென்மார்க் பிரதமர் வரவேற்ற விதத்தில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டியது.
1. மிகவும் சாதாரணமான மற்றும் நெருக்கமான உரையாடல்.
2. பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, நாடு பாதுகாப்பாக இருப்பது.
3. ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பது.
4. சைக்கிள் ஓட்டுதல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
5. இதை பொது மக்கள் எளிதாக தொடர்புபடுத்தி கொள்ளலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
இது, வழக்கமான பாதுகாப்பு ஏற்பாட்டில் இருந்து ஒரு புத்துணர்ச்சியூட்டும் மாற்றம் போல் தெரிகிறது. எதிர்காலத்தில், இம்மாதிரியான சூழல் உங்கள் நாட்டில் ஏற்படும் என நினைக்கிறீர்களா?