நேபாளம் பொக்காரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் பயணிகள் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மலேசியா காத்மாண்டுவில் இருந்து நேபாளம் கஸ்கி மாவட்டத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற எட்டி ஏர்லைன்ஸின் விமானம் விபத்துக்கு உள்ளானதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் 68 பயணிகளும் நான்கு விமான குழுவினரும் பயணம் செய்துள்ளனர். பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் இருந்து புகை வெளியேறுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்த செய்தி இன்னும் வெளியாகவில்லை. எத்தனை பேர் உயிரிழந்தனர், உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை குறித்த உறுதிபடுத்தப்பட்ட செய்தி வெளியாகாததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
விபத்தில் சிக்கிய விமானத்தின் மிச்ச பாகங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதனை அணைக்க மீட்பு படை வீரர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து உள்ளூர் அதிகாரி கூறுகையில், "வீரர்கள் ஏற்கனவே அங்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் தீயை அணைத்து பயணிகளை மீட்பதில் தற்போது அனைத்து நிறுவனங்களும் கவனம் செலுத்தி வருகின்றன" என்றார்.
இதேபோல, சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள கோவிலில் செஸ்னா பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் விமானத்தின் பைலட் உயிரிழந்துள்ளதுடன், பயிற்சி விமானி காயமடைந்தார்.
இந்த விமானம் தனியார் விமான பயிற்சி அகாடமிக்கு சொந்தமானது. இரவில் அடர்ந்த மூடுபனியில் விமானம் தரையிறங்க முயன்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்டமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
சமீப காலமாக, விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இது பெரும் பிரச்னையாக மாறியுள்ள நிலையில், தற்போது நேபாளத்தில் விபத்து நடந்துள்ளது.