கடந்த மாதம் சீனா தனது பூஜ்ஜிய கோவிட் கொள்கையை கைவிட்டதிலிருந்து கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 60,000 பேர் மருத்துவமனையில் இறந்துள்ளனர் என்று தேசிய சுகாதார ஆணையத்தின் (NHC) மருத்துவ அதிகாரி நேற்று பெய்ஜிங்கில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். டிசம்பர் 8 முதல் ஜனவரி 12 வரை சீனாவில் 59,938 கோவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.


கோவிட்-19 இறப்புகளை குறைவாகப் பதிவு செய்ததற்காக சீனா உலகளவில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீனாவில் கோவிட் காய்ச்சல் மற்றும் அவசரகால மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக சீன சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார்.






நிலைமை தொடர்ந்து மோசமாக இருப்பதால், கொரோனா பரவல் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு WHO சீனாவைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீனா தனது கடுமையான 'பூஜ்ஜிய-கோவிட்' கொள்கையை கைவிட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு காரணமாக 5,503 உயிரிழந்துள்ளதாகவும், கொரோனா உடன் இணை நோயாளிகள் 54,435 பேர் இறந்துள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த இறப்புகள் அனைத்தும் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நிகழ்ந்துள்ளது. மேலும் இது மருத்துவமனையில் இறந்தவகளின் எண்ணிக்கை மட்டுமே ஆகும் அதாவது வீட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை உள்ளடங்காது என கூறப்பட்டுள்ளது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிவித்த நிலையில் சுகாதார அதிகாரி ஒருவர், கொரோனா காய்ச்சல் மற்றும் அவசரக்கால தேவைகளின் அடிப்படையில் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், அதே சமயம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது எனவும் கூறினார்.


 டிசம்பர் தொடக்கத்தில், பெய்ஜிங், நவம்பர் மாத இறுதியில் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு கொரோனா  பரிசோதனைகள், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றின் கடுமையான கொள்கைகளை திடீரென அகற்றியது, அதன் பின்னர் நாடு முழுவதும் சுமார் 1.4 பில்லியன் கொரோனா வழக்குகள் அதிகரித்தன என்பது அறியப்பட்டதே ஆகும். சீனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 8 அன்று சர்வதேச பயணிகளுக்கு அனுமதி வழங்கியது.


 பீக்கிங் பல்கலைக்கழகத்தின் (peking university) சமீபத்திய ஆய்வின்படி, ஜனவரி 11, 2023 நிலவரப்படி சீனாவில் சுமார் 900 மில்லியன் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அது நாட்டின் மக்கள் தொகையில் 64 சதவீதம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22 முதல் சீனப் புத்தாண்டு மற்றும் வசந்த விழாவின் போது கிராமப்புற சீனாவில் வழக்குகள் அதிகரிக்கும் என்று சீன உயர் தொற்றுநோய் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.