moon's age: அப்போலோ 17 விண்கலம் மூலம் நிலவின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்ட கல்லை கொண்டு நடத்திய, ஆய்வில் பல்வேறு புதிய தகவல் வெளியாகியுள்ளது.


நிலவில் சேகரித்த மாதிரிகள் கொண்டு ஆய்வு:


அப்பல்லோ 17 என்பது நாசாவின் அப்பல்லோ திட்டத்தின் பதினொன்றாவது மற்றும் இறுதி விண்கலமாகும். இதன் மூலம் தான் ஆறாவது முறையாகவும் மற்றும் மிக சமீபத்தில் மனிதர்கள் நிலவில் கால் பதித்த வரலாற்றுச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. கடந்த 1972ம் ஆண்டு நிலவிற்கு சென்ற இந்த விண்கலத்தில், அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஹாரிசன் ஸ்மிட் மற்றும் யூஜின் செர்னான் பயணித்தனர். தற்போது வரை நிலவில் கால் பதித்த கடைசி நபர்களாக கூறப்படும் இவர்கள், 110.4 கிலோ எடையிலான மண் மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு கொண்டு வந்தனர்.


51 ஆண்டு கால ஆய்வு:


நிலவில் சேகரிக்கப்பட்ட இந்த மாதிரிகளை கொண்டு, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நீண்ட ஆய்விற்குப் பிறகு  நிலவில் சேகரிக்கப்பட்ட பாறையின் உள்ளே இருக்கும் ஜிர்கான் கனிமத்தின் படிகங்கள், நிலவின் தோற்றம் மற்றும் துல்லியமான வயது பற்றிய பல்வேறு புதிய தகவல்களை வழங்கியுள்ளது. அதன்படி, ஏற்கனவே கணித்ததை விட நிலவின் வயது 4 கோடி ஆண்டுகள் கூடுதலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நிலவின் வயது என்ன?


சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆடம் ப்ரோப் டோமோகிராப் (atom probe tomogrophy) எனும் முறையை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, நிலவின் வயது முன்பு கணித்ததை விட 4 கோடி ஆண்டுகள் கூடுதலாக இருக்கும் எனவும்,  அதாவது நிலவு உருவாகி 4.46 பில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதாவது சூரிய குடும்பம் உருவான அடுத்த 110 மில்லியன் ஆண்டுகளிலேயே நிலவு உருவாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


ஆய்வறிக்கை சொல்வது என்ன?


”இந்த ஆய்வு 51 ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்டு பூமிக்கு கொண்டு வரப்பட்ட மாதிரியில் செய்யப்பட்டது என்ற உண்மையை உணர்வது நன்றாக உள்ளது. அந்த நேரத்தில், அணு ஆய்வு டோமோகிராபி உருவாக்கப்படாமல் இருந்தது. அன்றைய விஞ்ஞானிகள் இன்று நாம் செய்யும் பகுப்பாய்வுகளின் வகைகளை கற்பனை செய்திருக்க மாட்டார்கள்" என்று சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியரும், ஆய்வின் மூத்த ஆசிரியருமான சிகாகோவில் உள்ள ஃபீல்ட் மியூசியத்தின் மூத்த ஆராய்ச்சி இயக்குனரான காஸ்மோகெமிஸ்ட் பிலிப் ஹெக் கூறியுள்ளார். அதோடு,பூமி, செவ்வாய் மற்றும் சந்திரனில் காணப்படும் அனைத்து பழமையான கனிமங்களும் சிர்கான் படிகங்களாக உள்ளன. வைரத்தையும் தாண்டி சிர்கான் என்றென்றும் நீடித்து இருக்கும். சிர்கான் மிகவும் கடினமானது.  மோசமான வானிலையால் பாறைகள் உடைந்தாலும் அவை அந்த பாதிப்பில் இருந்து தப்பி அழியாமல் உள்ளன” என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அணு ஆய்வு டோமோகிராஃபி:


2021 இல் வெளியிடப்பட்ட ஜாங் தலைமையிலான ஒரு ஆய்வு, நிலவில் சேகரிகக்ப்பட்ட பாறை படிகங்களில் எத்தனை யுரேனியம் மற்றும் ஈயத்தின் அணுக்கள் உள்ளன என்பதை அளவிட அயன் மைக்ரோப்ரோப் பகுப்பாய்வு என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியது. இது  கதிரியக்க யுரேனியத்தின் சிதைவின் அடிப்படையில் சிர்கானின் வயதைக் கணக்கிடுகிறது. சிர்கான் படிக அமைப்பில் குறைபாடுகள் இருந்தால், ஈய அணுக்கள் சம்பந்தப்பட்ட ஏற்படும் சிக்கலின் காரணமாக அந்த வயதை மற்றொரு முறை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். அதன்படி, படிகங்களின் வயதை உறுதிப்படுத்தும் வகையில், ஈய அணுக்கள் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதைத் தீர்மானிக்க அணு ஆய்வு டோமோகிராஃபி முறை இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


”இந்த ஆய்வின் முடிவுகளானது நானோ அளவிலான அல்லது அணு அளவிலான ஆய்வுகள்  கூட, நம் முன் உள்ள மிகப்பெரிய கேள்விகளுக்கான பதிலை தரக்கூடும் என்பதற்கு இந்த ஆய்வு ஒரு எடுத்துக்காட்டு” என ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் காஸ்மோகெமிஸ்ட் ஆய்வின் முதன்மை எழுத்தாளர் ஜெனிகா கிரேர் தெரிவித்துள்ளார்.